Monday, July 19, 2010

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் பிரபாகரனே வட- கிழக்கின் முடிசூடா மன்னன்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்றுவரை முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்' எனவும் ' அவர் இந்தியாவுக்கு எதிரானவர் அல்லர் எனவும் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்;ளார்.

காமராஜரின் 108 ஆவது பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சியின் 125 ஆவது ஆண்டு விழாப் பொதுக்கூட்டம் ஆகியன விருதுநகரின் தேசபந்து திடலில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார். இக்கூட்டம் நடைபெற்ற விருதுநகர் ம.தி.மு.க. தலைவர் வைகோவின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.


இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே அமைச்சர் சிதம்பரம் மேலும் தெரிவித்ததாவது:-

'ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது. நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்லர். ஆனால் அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன்.

அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன். ராஜீவ்காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையின் இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.

இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி ரூபா நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க 1000 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன் துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தையும் திருத்திக் கொடுக்க இந்தியா முன் வந்திருக்கிறது. அங்கு இம்பெயர்ந்த இரண்டு இலட்சம் தமிழ் மக்களும் இன்னும் இரு வருட காலத்திற்குள் வீடுகளைப்பெற்று புனர்வாழ்வளிக்கப்பட்டிருப்பர் என நம்புகிறேன்'

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com