Saturday, July 3, 2010

பொன்சேகாவின் ஒலி நாடாக்களை னரிடம் ஒப்படைக்குமாறு ஊடகங்களுக்கு உத்தரவு

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேடைகளில் ஆற்றிய உரைகள் முழுமையாக பதிவுசெய்யப்பட்ட வீடியோ நாடாக்களின் பிரதிகளை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி, சுவர்ணவாஹினி மற்றும் தெரண ஆகிய தனியார் தொலைக்காட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்ட நீதவான், குறித்த விடியோ நாடாக்களுடன் அவற்றை பதிவு செய்தவர்கள், செய்திகளை ஒளிப்பரப்பியவர்கள், செய்திப் பிரிவின் பணிப்பாளர்கள் ஆகியோரிடம் வாக்கு மூலங்களை பெறவும் நீதவான் புலனாய்வுத்துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேக்கா சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில், வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு படையினரிடம் சரணடையச் சென்ற புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பிரிகேடியர் சவேந்ர சில்வாவுக்கு உத்தரவிட்டதாக தனக்கு அறிய கிடைத்து என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்காகவே இந்த வீடியோ நாடாக்களை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம் குமரன் பத்மநாதனை வட மாகாண முதலமைச்சராக நியமிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதனை எவ்வாறு அரசாங்கம் கைது செய்ததென்பதனை தாம் அறிவதாகவும், அது யுத்த ரகசியம் என்பதனால் அதனை வெளிப்படுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் குமரன் பத்மநாதனை நாடு முழுவரும் அழைத்துச் செல்வதாகவும் சில முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர் சில இராணுவ அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், குமரன் பத்மநாதனுக்கு இராஜ மாரியாதை அளிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டுக் கொடுப்பனவு போதுமானதல்ல எனவும் உயிரிழந்தவர்களுக்கு இன்னமும் 150000 ரூபாவே நட்ட ஈடாக வழங்கப்படுவதாகவும், இதனைக் கொண்டு உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஓர் தானத்தையேனும் வழங்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

படைவீரர்களுக்கு உரிய நலத் திட்டங்கள் வழங்கப்படாமையினால் படையில் இணைந்து கொள்வதற்கு இளைஞர்கள் அதிக நாட்டம் காட்டுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com