Friday, July 16, 2010

இலங்கை அரசை இந்தியா தட்டிக்கேட்க வேண்டுமென ஜெயலலிதா ஆர்ப்பாட்டமாம்:

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்சியாக தாக்கப்படும்போது இந்திய மீனவர்கள் நலன்சார்பாக மத்திய அரசு இலங்கை அரசினை தட்டிக்கேட்க வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டமொன்றினை நாடத்தவுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவ்வார்ப்பாட்டத்திற்காக அவர் விடுத்துள்ள அறிக்கையில்

அந்நிய செலாவணியை ஈட்டுவதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கக் கூடிய மீன்பிடித் தொழில் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வந்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டு காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அன்றாடம் துன்புறுத்தி வருகின்றனர். தற்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினம், தினம் செத்து பிழைக்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைமைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்தச் சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில், நாகப்பட்டினம் மாவட்டம், வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் உயிரிழந்தார். பல மீனவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் இந்தக் கொடூர சம்பவத் திற்குப்பிறகு, ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கைக் கடற்படை மீண்டும் நடுக்கடலில் தாக்கி, அவர்கள் வசம் இருந்த மீன்களையும், மீன்பிடிச் சாதனங்களையும் பிடுங்கிக்கொண்டு அவர்களை விரட்டி அடித்துள்ளது. இலங்கை கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாகி விட்டது. மீனவர் கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

எனவே, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி, அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை விளைவிக்கும் இலங்கை அரசை தட்டிக் கேட்காத மத்திய அரசைக் கண்டித்தும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கு மாறு மத்திய அரசை வலியுறுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment