Wednesday, July 14, 2010

பான் கீ மூனுக்கு எதிராக ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் இருதரப்பு போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் ஐ.நா வின் செயலாளர் நாயகத்திற்கு அலோசனை வழங்கவென நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட குழுவினை கலைக்குமாறு கோரி நேற்று ஜெனிவாவில் ஐ.நா வின் தலைமைச் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டம் சார்த்தீகப் போராட்டங்களுக்கான அர்த்தம் புரியாமல் புலிகளின் ஆதரவாளர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட தெருக்கூத்தினை தற்போது இலங்கை அரச தரப்பினர் கையிலெடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இலங்கை அரசின் கபினட் அமைச்சர் விமல்விரவன்சவின் கட்சியினரால் இவ்வார்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் சகல நாடுகளிலும் வாழும் பெரும்பாலான சிங்கள மக்களுக்கு பிரத்தியேக அழைப்புக்கள் விடுக்கப்பட்டு மக்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுமார் ஏழுநாடுகளிலிருந்து மக்கள் கலந்து கொண்டிருந்தபோதும் அங்கு கூடிய மக்களின் எண்ணிக்கை 60 ஐ தாண்டியிருக்கவில்லை என தெரியவருகின்றது.

அதேநேரம் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீள நியமிக்கப்படுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.

2011ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல்களின் போது பான் கீ மூனை தோற்கடிக்கப்பதற்கு இலங்கை முயற்சிக்க வேண்டுமென கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

பான் கீ மூனுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வகையில் விசேட பிரதிநிதிகள் குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய யோசனைத் திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது.

இலங்கைக்கு எதிராக நிபுணர்கள் குழுவினை நியமித்ததன் மூலம் ஐக்கிய நாடுகளின் சட்ட விதிகளுக்கு புறம்பான வகையில் பான் கீ மூன் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பான் கீ மூனுக்கு எதிரான போராட்டத்தில், சீனா, ரஸ்யா, இந்தியா, தென் ஆபிரிக்கா, சவூதி அரேபியா, பொலிவியா, கியூபா, கென்யா, எகிப்து, ஈரான், ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதன் மூலம் பான் கீ மூனை மீள நியமிப்பதனை தடுக்க முடியும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொதுச் செயலாளர்களான பூத்ரஸ் பூத்ரஸ் காலி மற்றும் கொபி அனான் ஆகியோருக்கு எதிராக இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

பான் கீ மூனுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளும் நோக்கில் விசேட குழுவொன்று விரைவில் குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com