தலைமைகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு
வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவருமான அ. வரதராஜப்பெருமாள் நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக இந்தியாவில் தங்கியிருந்தார். தற்போது தாயகம் திரும்பி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: பி. வீரசிங்கம்
கேள்வி: யுத்தம் முடிவடைந்து வடக்கு கிழக்கில் சுமுக நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போதைய அரசியல் நிலைமைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: நிச்சயமாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. முன்னர் தமிழர்கள் மத்தியிலிருந்த நியாயமான கோரிக்கைகள் எல்லாம் மறைக்கப்பட்டு பிரிவினைவாதமும், யுத்தமுமே முன்னிலையில் இருந்தன. ஆனால் இப்போது அரசியல் தீர்வு தொடர்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை பற்றி நியாயமான முறையில் பேசவோ கலந்துரையாடவோ உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளவோ முடியாதிருந்த நிலைமை இப்போது இல்லை. மாறாக தமிழர்களின் கட்சிகளுக்கிடையிலே உடன்பாடுகளுக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் பிரிவினையை அடிப்படையாக கொண்டதல்ல என்பது இப்போது தெளிவாக உலகத்தின் முன்னால் வெளிப்படுத்தப்படுகிறது. இதேவேளை இலங்கையிலுள்ள சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கிடையேயும் உடன்பாடுகள் காணப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம் பெறுகின்றன.
இலங்கை அரசாங்கமும் தனது முயற்சிகள் பற்றி வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கான கலந்துரையாடலில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது.
தமிழக தலைவர்களும் இலங்கை தமிழர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வு இலங்கை அரசினால் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்கள். இவ்வாறான பல முற்போக்கான நிலைமைகள் ஏற்பட்டிருப்பது அரசியல் தீர்வு பற்றிய விடயத்தில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான குறிகாட்டிகளாகும்.
கேள்வி: இனவாத கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தும் கட்சிகளை மீறி அரசினால் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள முடியுமென நீங்கள் கருதுகிaர்களா?
பதில்: இனவாத சக்திகள் எந்த சமூகத்திலும் ஒரு குறிப்பிட்ட சிறிய விகிதாசாரத்தில் இருக்கக்கூடும். அவையே அந்த சமூகத்தின் பெரும்பான்மையான மக்களின் பிரதிநிதிகள் என்று கூற முடியாது. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இனவாத சக்திகளுக்கு சிங்கள மக்களில் ஐந்து சத வீதமானவர்கள் கூட ஆதரவாக இல்லை.
எனவே இலங்கை அரசு அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கு இனவாத சக்திகளை ஒரு தடையாக கருதவோ, கூறவோ முடியாது. இலங்கையின் இரு பெரும் கட்சிகளின் தலைவர்களும், சிறுபான்மை எண்ணிக்கை கொண்ட இனங்களின் கட்சிகளின் தலைவர்களும் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டால் அதனை நடைமுறைக்கு வர முடியாமல் எந்த இனவாத சக்தியாலும் தடுக்க முடியாது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு எனவே இங்கு சட்டங்களை ஆக்கும் மன்றங்களில் இருக்கும் பெரும்பான்மையான பிரதிநிதிகளின் மத்தியில் ஒரு பொது உடன்பாடு ஏற்பட்டால் இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்தத் தடையும் இருக்க மாட்டாது.
கேள்வி: இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகின்றது. இதில் உங்களின் பங்களிப்பு எவ்வாறானதாக அமையும்?
பதில்: தமிழர்களிடையே உள்ள கட்சிகளின் தலைமைகளுக்கிடையில் ஓர் ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்பது பரந்துபட்ட தமிழ் மக்களின் அபிலாஷையாக இன்றுள்ளது.
எனவே தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது அவ் அரசியல் கட்சிகளின் அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பரந்துபட்ட தமிழ் மக்களின் பொது நோக்காகவும், பொதுத் தேவையாகவும் இன்றைக்கு அவசியப்படுகிறது.
இந்த விடயத்தில் தமிழர்களின் அனைத்து தலைவர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒருவரது ஜனநாயகத்தை மற்றவர் மதித்து பொது விடயங்களில் ஓர் உடன்பாடு காண்பதை நோக்கி இன்று வெவ்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை ஓர் ஆரோக்கியமான விடயமாகும்.
இந்த விடயத்தில் நானோ அல்லது வேறு யாருமோ தனிப்பட்ட ரீதியில் சாதித்துவிட முடியாது. இங்கு கூட்டு முயற்சிகளே சாதனைகளை செய்யும். இதற்கான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு ஏனையவர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.
இந்த முயற்சியில் யாரையும் விலக்கிவிட வேண்டும் அல்லது யாரையும் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்ற போக்குகளை கைவிட்டு முடிந்தளவுக்கு விரிந்தளவான ஓர் ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.
இங்கு ஒற்றுமை என்பது கட்சிகள் ஒன்றோடொன்று இணைந்துகொள்ள வேண்டுமென்றோ அல்லது அமைப்பு ரீதியாக எடுத்த எடுப்பில் கூட்டுக்களை உருவாக்க வேண்டுமென்றோ அல்லது எவரும் தத்தமது கட்சிகளின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றோ அல்ல.
இங்கு வேற்றுமைகளின் மத்தியில் ஒற்றுமை வேறுபாடுகளின் மத்தியில் உடன்பாடுகள் என்பவையே அடிப்படையாகும்.
ஒவ்வொரு கட்சிக்கும் மாற்றுக் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பாக அவற்றின் கருத்துக்கள் தொடர்பாக வேறு அபிப்பிராயங்களும் விமர்சனங்களும் கூட இருக்கக்கூடும். அவற்றை வெளிப்படுத்தாது இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவ்வாறன விடயங்களின்போது ஆரோக்கியமான முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
விமர்சனங்கள் என்பது பொது விடயங்கள் தொடர்பானதாக இருத்தல் வேண்டும். தனிப்பட்ட ரீதியில் யாரையும் இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதாக அல்லாமல் சமூகத்தில் அரசியல் கருத்து வளர்ச்சிக்கும் முற்போக்கான இயங்குதல்களுக்கும் இடமளிக்கும் வகையாக அவை இருந்தால் வேறுபாடுகளின் மத்தியிலும் உடன்பாடுகள் கண்டு தனித்தனி கட்சிகள் என்கிற நிலையிலும் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையை கண்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்காக மேலும் ஓர் நியாயமான அரசியல் தீர்வை சாதிப்பதற்காக செயற்படுத்த முடியும். அந்த வகையில் என்னாலும் முடிந்த பங்களிப்பை செலுத்த தயாராக இருக்கிறேன்.
எனது பங்களிப்பு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பதனை இப்பொழுது திட்டவட்டமாக கூற முடியாவிட்டாலும் ஏனைய தலைவர்களோடு இணைந்து நின்று மக்களுக்கு பொதுவானவற்றை சாதிக்க வேண்டும் என்பதில் /Zதியாக உள்ளேன்.
கேள்வி:- இவ்விடயத்தில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இதயபூர்வமாக தொடர்ந்து செயற்படுவார்கள் என்று கருதுகிறீர்களா?
பதில்:- தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இதயபூர்வமாக செயற்படுவார்களா இல்லையா என்ற சந்தேகத்திலிருந்து நாம் விடயங்களை தொடங்கக்கூடாது என்றே கருதுகிறேன். ஒற்றுமை என்பது நம்பிக்கைகளையே அடிப்படையாக கொண்டதாகும்.
எனவே ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையேயும் நம்பிக்கையும் பரஸ்பர நலன்களை கண்டறிந்து பொது விடயங்களில் உடன்பாடுகள் கண்டு செயற்படுதல் என அமையுமாயின் ஒற்றுமை முயற்சிகள் நிச்சயம் வெற்றியளிக்கும். இந்த ஒற்றுமை முயற்சிகளில் வெற்றிகளை அடையும் விடயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். சிலவேளைகளில் பின்னடைவுகளும் ஏற்படலாம். இருந்தாலும் முயற்சி திருவினையாக்கும் என்பதற்கிணங்க தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உடன்பாடுகளை ஒற்றுமைகளை நிச்சயம் ஏற்படுத்தும் என நம்புவோம்.
கேள்வி:- யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைக்கான வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறது அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- அப்படி பார்த்தால் யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்திலும் அதுதான் நிலைமை. யுத்தத்தின் ஒரு பகுதியினராக இருந்த புலிகள் தான் தமிழர்களின் தலைவர்களாக இருந்தார்கள் என்று கருதுவது தவறானதாகும். அவர்கள் தமிழர்களின் அழிவுக்கே வழிவகுத்தார்கள். தமிழர்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களை எல்லாம் தமிழர்களுக்கு கிடைக்க விடாது செய்தவர்களும் அவர்களே. தமிழர்கள் மத்தியிலிருந்த நல்ல பெரும் தலைவர்களையும் எதிர்காலத் தலைவர்களாக வந்திருக்கக்கூடிய இளந் தலைவர்களையும் யுத்த காலமே கொன்றொழித்தது. யுத்தம் முடிவடைந்துள்ள இன்றைய நிலையில் சமூகத்தில் அரசியல் பொருளாதார செயற்பாடுகள் ஆக்கபூர்வமானவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் முன்னோக்கி நகர்த்தப்பட்டால் தமிழ் சமூகத்திலிருந்து நல்ல தலைவர்கள் எல்லாம் மேலெழுந்து வருவார்கள். ஆற்றல்மிக்க இளந் தலைவர்கள் உருவாகுவார்கள். ஆயுத வன்முறையை அடிப்படையாக கொண்ட யுத்தமே தமிழ் சமூகத்திற்கு உரிய அளவுக்கு தலைவர்கள் இல்லாதிருக்கச் செய்தது. யுத்தமற்ற சூழல் தலைவர்களை உருவாக்கும்.
கேள்வி:- யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் திட்டமிட்ட மறைமுகமான குடியேற்றங்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பதில்:- யுத்தம் முடிந்து ஓராண்டு ஆகியும் இராணுவ பாதுகாப்பு வலயங்கள் முற்றாக நீக்கப்படவில்லை இறுதிநேர யுத்தத்தின் காரணமாக நிலைகொள்ளப்பட்ட விரிவுபடுத்தப்பட்ட இராணுவ முகாம்களும், இராணுவ நிலைகளும் இன்னும் விலக்கப்படவில்லை. இன்னமும் கணிசமான பகுதிகளுக்கு அந்தந்த இடங்களைச் சேர்ந்த மக்களோ அல்லது இலங்கையின் ஏனைய பிரஜைகளோ சுதந்திரமாக சென்று வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படவில்லை.
இவ்வாறான காரணங்களை அடிப்படையாகக் கொண்டே மறைமுகமான குடியேற்றங்கள் இடம்பெறப் போவதாகவும் ஊகிக்கப்படுகின்றன. அந்த ஊகங்களுக்கு வலு சேர்க்கும் வகையாக அரசாங்கத்தின் சில தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இவற்றினால் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக சந்தேகங்கள் மேலும் வலுக்கின்றன.
ஆனால் இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. ஊகங்களின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் மீது எனது கருத்தை கூறுவது சரியானதல்ல. அவ்வாறான ஊகங்களை கொள்பவர்கள் அரசியல் தலைவர்களையோ, மற்றும் சமூகத் தலைவர்களையோ அந்தந்த இடங்களுக்கு கூட்டிசென்று நிலைமைகளை கண்டுகொண்டு சரியாக பார்த்து அவ்வாறான இடங்களில் குடியிருப்பவர்கள், வேலை செய்பவர்களுடன் பேசி உண்மைகளை கண்டறிய வேண்டும். ஊகங்களை பரப்பி மக்களை அச்சுறுத்துவது இன்றைய காலத்திற்கு பொருத்தமானதல்ல.
கேள்வி:- இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளையும் இணைத்து செயற்படுவது தொடர்பாக கவனம் செலுத்தப்படுமா?
பதில்:- இது தொடர்பாக கவனம் செலுத்துதல் அவசியமாகும். வெறுமனே தமிழ் கட்சிகளுக்கிடையில் கூட்டு இணைப்பு தமிழ் கட்சிகள் மட்டும் மேற்கொள்ளும் ஒருமித்த குரல் என்னும் போக்கு சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தையும் தமிழர் எதிர்ப்பு போக்கையும் சிங்கள இனவாத சக்திகள் உருவாக்குவதற்கே துணை செய்யும்.
இலங்கையில் ஓர் அரசியல் தீர்வு நிரந்தரமானதாக அடையப்பட வேண்டுமானால் கணிசமான சிங்கள மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானதாகும். சிங்கள மக்களை மிரட்டியோ அச்சுறுத்தியோ அல்லது சந்தேகம் கொள்ள வைத்தோ தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதை கடந்தகால அனுபவங்கள் நிரூபித்திருக்கின்றன.
தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளின் நியாயங்களை பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்கு பரப்புவதற்கு தென்னிலங்கை அரசியல் கட்சிகளோடும் இணைந்து செயற்படுவது அவசியமானதாகும். தென்னிலங்கையில் உள்ள இனவாதிகளைவிட இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக முற்போக்கு சக்திகளே அதிக எண்ணிக்கை கொண்டவர்களா வர். அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் நியாயங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு வகையாக தமிழ் கட்சிகள் செய ற்பட வேண்டும். அதுமட்டுமல்லாது ஏனைய சிறுபான்மை இன மக்களின் கட்சித் தலை வர்களோடும் உடன்பாடுகளை கண்டு இணை ந்து செயற்படுதல் வேண்டும். எந்த விடய த்திலும் 100 சதவீதம் என்று சாதிக்க முடியாது. எனினும் முடிந்தளவுக்கு அனைத்து இன மக்களுக்கு இடையேயுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கிடையில் பரந்தளவில் விரிந்தளவு ஓர் ஒற்றுமை இணைந்து செயற்படுகின்றமை அவசியமானதாகும்.
கேள்வி:- 13 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த விடயத்தில் உங்களது அபிப்பிராயம் என்ன?
பதில்:- அரசியல் யாப்பின் 13வது திருத்தமே இலங்கையில் மாகாண சபை என்ற அமைப்பு முறையை உருவாக்கியது. அதிலேயே மாகாணங்களுக்கான அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாகாண அரசுகளுக்கும் இடையேயான உறவுகள் போன்ற விடயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 13வது திருத்தம் தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளை திருப்திப்படுத்தும் ரி(8கி!8 அமையவில்லை என்பதனை தமிழ் தலைவர்கள் மட்டுமல்ல சிங்கள தலைவர்களும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஒத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள். அதன் விளைவே மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற கமிட்டி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்களின் அரசியல் யாப்பு பிரேரணை, அரசியல் யாப்பு நிபுணர்களின் பெரும்பான்மை யானோரின் சிபாரிசு, பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களின் தலைமையிலான பாராளுமன்ற சர்வ கட்சிகளின் குழுவின் பிரேரணைகள் என பல முன்மொழிவுகளை கடந்த 20 வருடகால வரலாறு முன் வைத்திருக்கிறது.
13வது அரசியலமைப்பு சீர்திருத்தம் நடைமுறையில் கடந்த 20 வருடங்களாக தென்னிலங்கையிலும் கடந்த இரு வருடங்களாக கிழக்கு மாகாணத்திலும் செயற்படுத்தப்படுகின்றது. இந்த நடைமுறை அனுபவம் 13வது திருத்தத்தை திருப்தியானதென மக்களோ அரசியல் தலைவர்களோ கொள்ளவில்லை என்பதை காட்டுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் 13வது திருத்தத்துக்கு அப்பால் அதிகார பகிர்வு திட்டமொன்றை முன்வைப்பதாகவும் நடைமுறைப்படுத்தப் போவதாகவும் பல தடவைகள் அறிவித்திருக்கிறார்.
எனவே 13வது திருத்தம் எதிர்வரும் காலத்திற்கு அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கு அதற்குரிய அரசியல் யாப்பு திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஒரு அடிப்படை அனுபவமாக கொள்ளப்படலாம். 13வது திருத்தம் இப்பொழுது நடைமுறையில் சட்டமாக உள்ளது என்ற வகையில் அதற்கு சிறந்த விளக்கத்தையும் உரிய அமுலாக்கத்தையும் அதிகார பகிர்விற்கான பரந்த மனதுடன் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தலாம். 13வது திருத்தம் அடிப்படையில் ஒரு பிழையான சட்டம். அது பல ஓட்டைகளையும் அது பல தவறுகளுக்கான வழிவகைகளையும் கொண்டிருக்கிறது. எனவே இலங்கையின் அரசியல் யாப்பில் 13வது திருத்தத்திற்கு மாற்றாக ஓர் அதிகாரப் பகிர்வு சீர்திருத்தம் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்காக சிபாரிசு கமிட்டிகள் ஆலோசனை கமிட்டிகள் என காலத்தை இழுத்தடிக்காமல் முதற் கட்டமாக 13வது திருத்தத்தை அரசாங்கம் நல்ல அணுகுமுறையிலும நல்ல விளக்கத்துடனும் அமுலாக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி:- இனப்பிரச்சினை தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வாறானதாக அமைய வேண்டும் என கருதுகிறீர்கள்?
பதில்:- இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஓர் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களுக்கிடையேயும் சமாதானமும் சகோதரத்துவமும் நிலவ வேண்டும். இலங்கையில் பொருளாதார ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படவேண்டும் என இந்தியா கருத்துக்கள் கொண்டிருப்பதை நாம் அனுபவத்தில் காண முடிகிறது.
இலங்கையில் ஓர் அரசியல் தீர்வையும் சமாதானத்தையும் நிலை நிறுத்துவதற்காக இந்தியா தனது அரிய போர்வீரர்கள் 1200 இற்கு மேல் உயிர் தியாகம் செய்திருக்கிறது. 4000 பேருக்கு மேல் காயப்பட்டவர்களாகும். வலியை சுமந்திருக்கிறது. பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இலங்கை மக்களுக்காக செலவழித்திருக்கிறது. எனவே இலங்கையின் சமாதானம் நல்லுறவு ஒற்றுமை என்பவற்றிற்கான கொள்கைகளையே இந்தியா கொண்டிருக்கிறது. இலங்கையில் ஓர் பிரிவினை ஏற்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பியதில்லை. அவ்வாறான எந்த முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்காது என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. எனினும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா தொடர்ந்தும் அக்கறையோடு செயற்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையுடன் இந்தியா பகை வடிவில் அல்லாமல் நட்பின் அடிப்படையில் உரிய பங்களிப்பை செலுத்தும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
கேள்வி:- யுத்தம் முடிவடைந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில் வடக்கு மக்களின் சமூக பொருளாதார விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா?
பதில்:- வடக்கு கிழக்கில் புலிகளின் பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் படிப்படியாக தத்தமது பொருளாதார நடவடிக்கைகளை சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வருகிறார்கள். வர்த்தகம், போக்குவரத்துக்கள், சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் பல வளர்ச்சிகள் ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது. மக்கள் மத்தியில் விவாதங்கள், கலந்துரையாடல்கள், வெவ்வேறுபட்ட கருத்துக்களை வெளியிடல், தாம் விரும்பிய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்தல் போன்ற விடயங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
30 ஆண்டுகால யுத்த அழிவுகள் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக போனமை, பொருளாதார உட்கட்டுமானங்கள் எல்லாம் சிதைந்து போய் கிடக்கின்றன. கண்ணிவெடிகள் பெருந்தொகையான நிலங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றமை, எங்கு பார்த்தாலும் இராணுவ முகாம்களும், நிலைகளும் பரந்து கிடக்கின்றமை என உள்ள நிலைமைகளிலிருந்து பொருளாதார முன்னேற்றம் சமூக முன்னேற்றங்கள் அரசாங்க நிர்வாக அமைப்புக்களின் முன்னேற்றங்கள், மக்கள் அரசியல் விடயங்களில் விழிப்பாக செயற்படுதல் ஊழல் இன்மை, மோசடிகள் இன்மை வன்முறையாளர்கள் தொடர்பாக பயமின்மை. இராணுவம் தொடர்பான அச்சமின்மை போன்ற பல விடயங்களில் இன்னமும் பாரிய முன்னேற்றங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலையிலேயே அங்கு நிலைமைகள் காணப்படுகின்றன.
தற்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் விடயங்களின் வளர்ச்சி வேகம் அழிவுகளிலிருந்து மக்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்கு போதியதாக இல்லை. எனவே அரசாங்கம் ஒரு விரைவுபடுத்தப்பட்ட புனர்வாழ்வு புனரமைப்பு பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்களை சரியாகவும், முறையாகவும் முன்னெடுப்பதற்கு உரிய அரச கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். எத்தனைதான் போரின் அழிவுகளை சந்தித்த போதிலும் தமிழர்கள் மத்தியிலிருந்த சாதி பாகுபாடுகள், சாதி புறக்கணிப்புக்கள் கொஞ்சமும் குறைந்ததாகத் தெரியவில்லை. பொருளாதார ரீதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் மனோபாவ ரீதியில் சமூக மாற்றங்கள் நிகழ்ந்ததாக இல்லை. ஒரு புதிய நவீன சமூக பொருளாதார வளர்ச்சிக்கு தமிழர் சமூகம் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது இன்றைய அவசியமாகும்.
0 comments :
Post a Comment