ரணில் மீது தண்ணீர்ப் போத்தல் எறிந்தமை தொடர்பில் விசாரணை
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது பாராளுமன்றத்தில் தண்ணீர்ப் போத்தல் எறியப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படுமென்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்தார். எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க நேற்று (06) சபையில் சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பியதுடன், ரணில் விக்கிரமசிங்க மீது, கம்பஹா மாவட்ட உறுப்பினர் சரண குணவர்தன தண்ணீர்ப் போத்தலை எறிந்தாரென்பதற்கு கண்ணால் கண்ட சாட்சி உள்ளதென்றும் இதற்கு உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சபாநாயகரைக் கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பதில் அளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரேரணையொன்றைச் சமர்ப்பித்தால், சிறப்புரிமை குழுவுக்கு முன்வைத்து விசாரணை நடத்தப்படுமென்று குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் மீது தண்ணீர்ப் போத்தலை எறிந்ததாகத் தனது பெயர் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான செயலைத் தாம் செய்யவில்லை என்றும் பிரதியமைச்சர் சரத் குணரட்ன, சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.
தமது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைப்பதற்காக பத்திரிகைச் செய்தி திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். அது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment