Tuesday, July 6, 2010

சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் வருடாந்தம் நிகழ்த்தப்படும் வீரமக்கள் தின நிகழ்வுகள் நேற்று பிற்பகல் சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் , தமிழீழ விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும் செயலதிபருமான தோழர் உமா மகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நாளான ஜுலை 13 ம் திகதி முதல் 19 ம் திகதி வரையான நாட்கள் வீரமக்கள் தினமாக பிரகடனம் செய்யப்பட்டு, போராட்டத்தின் பெயரால் உயிரிழந்த போராளிகள் பொதுமக்கள் வருடந்தோறும் நினைவு கூரப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

போராட்டத்தின் பெயரால் உயிரிழந்த அரசியல் கட்சித் தலைவர்கள் , போராளிகள் , பொதுமக்களின் திருவுருவப் படங்களுக்கான மலரஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. திருவுருவப்படங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளை உறுப்பினர்கள் , ஜேர்மன் கிளை உறுப்பினர்கள் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளை சார்பாக கிளையின் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு. மனோ அவர்கள் ஆரம்ப உரையை நிகழ்;த்தினார். தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் திரு. சித்தார்த்தன் அவர்களின் நினைவுரையை சுவிஸ் கிளை உறுப்பினர் திரு . சிவானந்தசோதி அவர்கள் வாசித்தளித்தார்.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையிலிருந்து திரு . ஜெகநாதன் , சுவிஸ் கிளையிலிருந்து திரு. கலாமோகன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை சார்பாக திரு. பெர்ணாண்டோ , சுவிற்சர்லாந்து தமிழர் கலாச்சார மன்றத்தின் சார்பாக திரு. விஜயநாதன் இரட்ணகுமார் , இலங்கையர் புலம்பெயர் சம்மேளனம் சார்பாக திரு. நந்தன ஆகியோர் உரையாற்றினர்.

அங்கு ஜெகநாதன் அவர்கள் பேசுகையில், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் போராட்ட இயக்கங்கள் யாவுமே மக்களுக்கு தவறு இழைத்திருக்கின்றது எனவும், இப்போராட்டத்தின் ஆரம்ப சக்தியாக புளொட் இயக்கத்தினராகிய தாம், போராட்டத்தின் பெயரால் இடம்பெற்று முடிந்துள்ள இழப்புக்களுக்கும் தவறுகளுக்குமான பொறுப்பின் பங்கினை ஏற்றுக்கொள்ளவதாகவும் தெரிவித்தார். அத்துடன் இப்போராட்டமானது தனியே தமிழீழத்திற்கான போராட்டமாக அமைந்திருக்கவில்லை எனவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சகலரும் சமத்துவமாக வாழ்வதற்கானதோர் நிலைமையினை உருவாக்குவதற்கான போராட்டமாகவே அமைந்திருந்தது. இவ்விடயத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் காத்திரமான பங்கினை ஆற்றியுள்ளனர். அத்துடன் இன்று போராட்டம் ஓய்ந்திருந்தாலும் அது முற்றுப்பெறவில்லை என தெரிவித்த அவர் தொடர்ந்தும் எம் மக்களின் தேவைகளுக்கான தமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

திரு. இரட்ணகுமார் அவர்கள் பேசுகையில், சுவிற்சர்லாந்து தமிழர் கலாச்சார மன்றம் எனும் அமைப்பு சுமார் கடந்த 3 தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கான சேவையினை செய்து வருவதாகவும,; இவ்வமைப்பு இலங்கையில் இருந்திருந்தால் அது நேரகாலத்துடன் மரணித்திருக்கும் எனவும் சுவிற்சர்லாந்தின் சட்டதிட்டங்களானது தாம் தொடர்ந்தும் செயற்படுவதற்கு வழிவிட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், தமது செயற்பாடுகளை பாசிசம் முடக்க முற்பட்டபோது அதற்கு உதவியாக நின்று எம்மீது சேறுபூசிய ஊடகங்கள் இன்று எமது சேவையினை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் எம் நிகழ்வுகளுக்கு விளம்பரம் செய்ய தாமாகவே முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

இலங்கையர் புலம்பெயர் சம்மேளனம் சார்பாக பேசிய திரு நந்தன அவர்கள் பேசுகையில் : இலங்கை என்பது இங்கு வீற்றிருக்கின்ற அனைத்து மக்களதும் தாய்நாடு எனவும் அங்கு இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்துள்ளவர்கள் அனைவரும் இலங்கையரே எனக்கூறிய அவர் அவ்வாறு உயிரிழந்த ஒரு தொகுதியினரை நினைவுகூரும் இந்நிகழ்வில் பங்கு கொள்வதில் தான் மகிழ்சி அடைவதாக தெரிவித்தார்.

அத்துடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை சார்பாக பேசிய திரு. பெர்ணாண்டோ அவர்கள், போராடப் புறப்பட்ட இயக்கங்களை பாசிசம் ஒடுக்கியதன் கொடுமைகள் என்றும் மறக்க முடியாதவை என தெரிவித்ததுடன், வீர மக்களுக்கு அஞ்சலியாக கவிதை ஒன்றையும் அங்கே சமர்ப்பணம் செய்தார்.

வீரமக்கள் தினம் வீரமறவர் தினம்

விடியல் நெஞ்சில் சுமந்து
வீரவாகை தலையில் ஏந்தி
வீரத்தின் மறவர்களாக
வீற்றிருந்த தோழர்கள் மறைந்த தினம்

வெற்றி மாலை கழுத்தில் சூடி
வேலும் வாளும் கரத்தில் ஏந்த
விடுதலை தனயன்களை
வித்தாக தரைக்குத் தந்த
வீரமிக்க மக்கள் மறைந்த தினம்

காவியங்கள் பல படைக்க
காத்திருந்த கவரிமான்களை
கறைபடிந்த மனிதர்கள்
கல்லறைக்குள் மறைத்த தினம்

வாழேந்தி பகைமுடித்து
வழிகளில் புகழ் ஏந்தி
வழிகாட்டிக் கற்களாக நிற்க வேண்டிய உத்தமர்களை
வஞ்சகர்கள் தாம்வாழ அன்று
வாள்கொண்டு வெட்டிவீழ்த்தி மறைத்த தினம்

தலைதனில் முடிசூடி
தரணிதனை அளந்த
தன்னலமற்ற தோழர்கள் இவர்கள்
தலைக்கனம் பிடித்து வெறிதனை தீர்க்கும்
தரை கெட்ட மனிதர்களால் அனுப்பிய தினம்

நெஞ்சத்தில் விடுதலை ஏந்திய தோழர்களை
நெருப்பில் இட்டு கருக்கிய வரலாறு நம்மினத்தில்
நெஞ்சம் கனக்கிறது தோழர்களே என்றும்
நெடுந்தூரம் பயணிக்கும் தினம்

விரல் தனை விந்தை காட்டி
விவேகத்துடன் சிந்தை நோக்கி
வீரத்தின் அரசிகளாக வலம் வந்த
வீரத்திண்ணம் தலையில் சுமந்த
விவேகிகள் விதைக்கப்பட்ட தினம்

கைகோர்த்த தோழர்களை
கைத்துப்பாக்கியால் அழித்த வடுக்கள்
கைதனை தூக்கி நின்ற வேளை
கணப்பொழுதில் கருக்கிபாசிசப்புலிகள்
கண்ணை விட்டு அழியாத தினம்

உன்மக்கள் மனங்களை நேசிக்கத் தெரியாத
உவர்ப்பான நெஞ்சம் கொண்டோரே
உள்ளம் கையில் எதிர்பாராதே
ஊற்றெடுக்கும் நல்லெண்ணம் தனை
உரிமையோடு நாங்கள் சந்திக்கும் தினம்

காவியங்களை கல்லறைக்கு
களப்பலிகளாக வசைபாடிய வஞ்சகர்கள்
கரங்களில் இருக்கும் கறைகளை
கழுவ மறந்ததினால் காவியங்கள் சிறைகளில்
கட்டுப்பாட்டுடன் அடைக்கப்பட்ட தினம்

கண்ணின் கருமணிகளை
கயவர் கருக்கியதால்
கனவாய் போகவில்லை இலட்சியங்கள்
கனிந்து வரும்காலம் இது எங்கள் தினம்

தோல்வியில்லாத நம்பயணம்
தொடர்ந்து பின்பற்றிச் செல்லும்
தோழர்களின் வழியில் என்றும்
தோகை மயிலும் விரித்தாடும் தோகைதனை

சூனிய எண்ணங்களை
சுயநலவாதிகள் அன்று
சுட்டெரித்து தெளிவடைந்திருந்தால்
சுடுசோறு பதமாய் நம்கைகளில்

சிந்திய குருதி வெள்ளத்தின் மீது
சிந்தித்து என்றென்றும் செயல்படுவோம்
சிறகுடைக்கப்படும்மண்ணில் புதைக்கப்பட்ட
சிந்தையில் வாழும் எங்கள் தோழர்கள் மீது..

(ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை தோழர்கள்.)..


அத்துடன் பல பெரியோர் சிறுவர்களின் கலைநிகழ்வுகளும், இறுதியாக 27.06.2010 அன்று நடைபெற்ற பரீட்சையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


















No comments:

Post a Comment