விமானக் கடத்தல் சந்தேகம். டெல்லியில் 27 பேர் கைது.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இரண்டு விமானங்களைக் கடத்தப் போகிறார்கள் என்று அனாமதேய தகவல் வந்ததை அடுத்து போலி விசா வைத்திருந்த 27 பேர் பிடிபட்டனர். அவர்கள் விமானங்களைக் கடத்த திட்டமிட்டு இருந்தனரா என்பதைக் கண்டுபிடிக்க விசாரணை நடக்கிறது.
அதேவேளையில் இந்தச் சம்பவத்தை தொடர்ந்து,நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து துபாய்க்கு செவ்வாய்க்கிழமை இரவு 7.25 மணிக்கு கிங்பிஷர் விமானமும் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானமும் புறப்பட இருந்தன.
அப்போது “உங்கள் விமானத்தில் வங்காள தேசத்தை சேர்ந்த சிலர் போலி விசாவுடன் துபாய் செல்ல இருக்கின்றனர். அவர்கள் நடு வானில் செல்லும் போது விமானத்தைக் கடத்தவும் திட்டமிட்டுள்ளனர்” என்று கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு அனாமதேய தொலைபேசி வந்தது.
தொடர்ந்து அதேபோல் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கும் தகவல் வந்தது.
உடனே இரு விமானத்திலும் ஏற வந்த பயணிகள் அனைவரும் கண்காணிக்கப் பட்டனர்.
கிங்பிஷர் விமானத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த 12 பேரும், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 15 பேரும் துபாய் செல்ல முன்பதிவு செய்திருந்த 27 பேரும் விமானத்தில் ஏறுவதற்கு வந்தனர்.
அவர்களைச் சோதனையிட்டபோது அனைவரிடமும் போலி விசா ஆவணங்கள் இருந்தன. உடனடியாக அவர்கள் 27 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது துபாய்க்கு கூலி வேலை செய்ய செல்வதாகவும் முகவர்களிடம் ரூ.60,000 கொடுத்து விசா பெற்றதாகவும் கூறினார்கள். இது போலி விசா என்று தெரியாது என்றும் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் சொன்ன தகவல் நம்பும்படியாக இல்லை. விமானங்களைக் கடத்தும் நோக்கத்துடன்தான் அவர்கள் செயல்பட்டு இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பிடிபட்ட அனைவரும் தனி இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
0 comments :
Post a Comment