Thursday, June 17, 2010

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம் World Day to Combat Desertification and Drought - புன்னியாமீன்

1994ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச்சபையின் தீர்மானத்திற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜுன் 17ஆம் திகதி முதல் இத்தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 1995ஆம்ஆண்டு ஜனவரி இலக்கம் A/RES/49/115 பிரகடனப்படி (January 30, 1995 by the United Nations General Assembly resolution A/RES/49/115) பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான போராட்ட தினமாக ஜுன் 17ஆம் திகதி உத்தியோக பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இன்று வரை ஐக்கிய நாடுகளின் பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான மகாநாட்டுக் குழுக்களும் ( PARTIES) அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இது பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுபவர்களும் இத்தினத்தை உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் 11ஆவது வருடாந்தக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்ட போது வறுமை ஒழிப்பு, பொருளாதார உதவி மற்றும் இம்மிலேனியத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைதல் என்பன பற்றி முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.வரட்சி நிலத்தில் நிலச் சிதைவுகள் ஏற்படும் பிரச்சினையைப்பற்றி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான பொறுப்பு மேற்கூறிய மகாநாடு மாத்திரமேயாகும். இதில் தற்போது 191 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

பாலைவனமாதலை உதாரணப்படுத்தக்கூடிய வகையில் பின்வரும் சம்பவத்தை இவ்விடத்தில சுட்டிக்காட்டுவது ஏற்புடையதாக இருக்கும். அதாவது சில வரலாற்று சான்றுகளின் பிரகாரம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சஹாரா பாலைநில பகுதியில் சில நீரூற்றுகள் காணப்பட்டதாக தெரிய வருகின்றது.தற்போது அந்நிலப்பகுதி தனிப்பாலை நிலமாகவே காணப்படுகின்றது.இது மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பாலைநிலங்களை நோக்கும் போது இத்தன்மையினை பொதுவாக அவதானிக்கலாம்.

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தின் போது, பாலைவனமாவதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கான மனநிலையைத் தூண்டுவதற்கானதும் உணர்வூட்டுவதற்கானதுமான நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலைவனமாவதை இலகுவாகத் தடுக்கலாம். அதற்கான தீர்வுகள் மிக இலகுவானவை. இதற்குரிய ஒரே ஒரு நடவடிக்கை சகல மட்டத்திலுமுள்ள மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதேயாகும்.

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும். பூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் சூடாகியுள்ளது. இவ்வாயுக்களை பசுமைக் கூடார வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் கூடார விளைவு என்று அழைக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம், மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம்.

பல நோய்கள் உருவாகலாம். மக்கள்தொகை அதிகரிப்பு, காடுகளை அழித்தல், அதிக அளவில் வாகனங்கள், பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல், குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பசுமைக் கூடார வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது.

கரியமில வாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. வாயுமண்டலத்தில் கரியமில வாயு இதே அளவில் உயருமானால் 2100-ஆம் ஆண்டில் 540 – 970 பிபிஎம் ஆக உயர வாய்ப்புள்ளது. கரியமிலவாயு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன. நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பசுமைக் கூடார வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக இதில் கரியமில வாயுவின் அளவு அதிகம்.மக்கள்தொகைப் பெருக்கம், தொழில் வளர்ச்சி, காடுகளை அழித்தல், அதிக அளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம், சுமார் 50 – 2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே, இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

தற்போது மீத்தேனின் அளவு 1783 பிபிபி – யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிபி-யன்கள் அதிகம். காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்கி வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. வெப்பத்தை உண்டாக்குவதில் கரியமில வாயுவைவிட இருமடங்கு சக்தி அதிகம்.60 சதவீத மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும் நெல் வயலிலிருந்தும் கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 40 சதவீதம் சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கி ஈரமான நிலங்களிலும் மற்றும் கரையான்கள் மூலமாகவும் உற்பத்தி செய்கின்றது.

பூமியிலிருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயுமண்டலப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 1000 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது. புவி வெப்பம் அதிகரிப்பால் தண்ணீர்ப் பற்றாக்குறையும், அதனால் வேளாண்மை உற்பத்தியில் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படலாம்.டஇத்தகைய நிலைகளையும் பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பெண்களுக்கு சிறப்பான முறையில் இதற்கெதிராகப் பாங்காற்ற முடியும் எனக்கூறப்படுகின்றது. குறிப்பாக வளர்முக நாடுகளின் கிராமப்புறப் பெண்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.எனவே இதற்கெதிரான நடைமுறைகள் பற்றிய நிகழ்வுகளை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வுகளை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள பல அமைப்புக்கள் முனைகின்றது.

‘நிலம் சிதைவடைவதற்கெதிரான செயற்திட்டம் ஒன்று பத்து வருடம் மெற்றிக் நகரில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பாலைவனமாவதற்கும், வரட்சிக்கும் எதிரான தினம் பற்றி நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்”என ஐ.நா.சபை செயளாலர் நாயகம் “பாங்கி-மூன் தமது செய்தியில் தெரிவித்தார்.இத்தினத்தின் வரட்சி நிலப்பிரச்சனையை சர்வதேச சூழல் நிகழ்ச்சி நிரலுக்கு உள்ளடக்க முனைகின்றனர். தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் அவுஸ்திரேலியா, அல்ஜீரியா, கனடா, சீனா, கானா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் சமீபகாலத்தில் இதுசம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தினத்தில் மாத்திரம் பாலைவனமாதல் பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுவது போதுமானதல்ல.அல்ஜீரியா போன்ற நாடுகள் பாலைவனமாதலை எதித்துப்போராடவும், விவசாய நிலங்களைப்பாதுகாக்கவும் பிரேசில் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் ஒரு தேசிய திட்டத்ததை செயற்ப்படுத்தியுள்ளது.லெபனானில்; விவசாய பாதிப்புக்கெதிரான பல முக்கிய செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாலைவனமாதல் மற்றும் வரடசிக்கெதிரான போராட்டங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுகின்றன.

இத்தினம் ஒரு பொது விடுமுறைதினமல்ல. பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான போராட்டதினத்தில் மக்களில் பொது வாழ்வு பாதிக்கப்படுவதில்லை. இங்கு போராட்டம் எனும் போது விழிப்புணர்வு நடவடிக்கையே முதன்மைப்படுத்தப்படுகின்றது.

இத்தினம் தொடர்பான கருப்பொருட்கள் வருமாறு:-
2009 - Conserving land and water = Securing our common future
2008 - Combating land degradation for sustainable agriculture
2007 - Desertificaton and Climate Change - One Global Challenge
2006 - The Beauty of Deserts – The Challenge of Desertification
2005 - Women and Desertification
2004 - Social Dimensions of Desertification: Migration and Poverty

இம்முறை (2010} மண்ணை வளப்படுத்தி, எல்லா இடங்களிலும் உயிர்களை வளப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளில் உலகெங்கும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏனெனில் வளமான மண் இருந்தால் மட்டுமே உயிர்கள் நிலைக்க முடியும். ஒவ்வொரு தனிநபரும் மண்ணை எங்ஙனம் பயன்படுத்துகிறார் என்பதிலேயே மண்ணின் ஆரோக்கியம் தங்கியிருக்கிறது.

நாம் உண்ணும் உணவின் அளவையும் தரத்தையும் கூட நாம் மண்ணில் மேற்கொள்ளும் செயற்பாடுகளே தீர்மானிக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே, சூழல்தொகுதி எமக்கு வழங்கும் சேவைகளும் அமைந்து விடுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com