பிரெட்றிக்காவின் LapTop நீதிமன்ற பாதுகாப்பில்.
வெள்ளைகொடியுடன் சரணடைய வந்த புலிகளின் முக்கியஸ்தர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச களமுனைத் தளபதி ஒருவருக்கு கட்டளையிட்டிருந்தார் என முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்தாக செய்தி வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் இன் மடிக்கணனி நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் பொன்சேகாவின் மேற்படி கருத்து அவசரகால சட்ட விதிமுறைகளை மீறியது என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறான தகவல் ஒன்றினை எந்தவொரு சந்தர்பத்திலும் தான் தெரிவிக்கவில்லை என ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ளார். அவர் அவ்வாறு தெரிவித்தமைக்கான குறிப்பு குறிப்பிட்ட பத்திரிகையாளரின் மடிக்கணனியில் உள்ளது என குற்றப்புலனாய்புப் பிரிவினர் மன்றுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பத்திரிகையாளரின் கணனியை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி சம்பா ஜானகி கட்டளை பிறப்பித்திருந்தார். கட்டளையினை ஏற்ற பத்திரிகையாளர் தனது சட்டத்தரணி ஊடாக கணனியை மன்றில் பாரமளித்துள்ளார். வழக்கு எதிர்வரும் ஜுலை 12ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மன்றில் சமர்பிக்கப்பட்ட கணனியில் 89 பக்கங்கள் உள்ள கோவை ஒன்று காணப்பட்டுள்ளது. அவற்றில் சில வெற்றுப்பக்கங்கள். கோவையிலுள்ள விடயங்கள் தொடர்பாக எவ்வித உரையாடல்களும் இடம்பெறவில்லை. வழக்கு நீதிமன்றில் எடுக்கப்பட்டபோது தடுப்புக்காவலிலுள்ள ஜெனரல் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
அதேநேரம் மேற்படி வழக்கு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவிடம் வாய்முறைப்பாடு பெறப்பட்டுள்ளதாக சீஐடி யினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment