Monday, June 7, 2010

ஐரோப்பிய செய்தி ஊடகங்கள் உலக சமூக அமைதியின்மை பற்றி எச்சரிக்கின்றன. Chris Marsden

கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் “ஐரோப்பாவை ஒரு பேரழிவு பயமுறுத்திக் கொண்டிருக்கிறது” என்று கார்ல் மார்க்ஸ் எழுதியபோது, இத்தாலியிலும் பிரான்சிலும் 1848ல் தொடங்கிய புரட்சிகர வெடிப்புக்களுக்கு முன் ஐரோப்பியக் கண்டத்தின் பெரும்பகுதியை சூழ்ந்திருந்த நிலைமை பற்றி அவர் குறிப்பிட்டார்.

சமீப காலத்தில் பல செய்தி ஊடகக்கருத்துக்கள் மோசமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் நேரடி விளைவாக புரட்சிகரப் பரிமாணங்களுடனான சமூக அமைதியின்மை அதேபோல் வெடிக்கக்கூடும் என்று கணித்துள்ளன. இந்த எச்சரிக்கைகள் ஐரோப்பா மீண்டும் தேசிய அழுத்தங்களுக்கு திரும்பும் என்றும், பாசிச இயக்கங்கள் எழுச்சி பெறும், ஏன் போர் கூட ஏற்படலாம் என்ற அபாயமான கணிப்புக்களுடன் தொடர்ந்து வந்துள்ளன.

உதாரணமாக பைனான்ஸியல் டைம்ஸில் மே 24 அன்று எழுதிய வரலாற்றாளர் சைமன் ஷஹமா, “தேவையானதை விட நிலைமையை அபாயகரமானதாக காட்டுவதற்கு தொலைவில் நான் இருக்கின்றேன். ஆனால் நீங்கள் காற்றில் இப்பொழுது கந்தகத்தின் நெடியை நுகரவில்லை, ஒரு சீற்றமான சகாப்தத்தின் நுழைவாயிலின் இருக்கிறோம் என்றும் நினைக்க மாட்டீர்கள்….ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சமூக குழப்பங்களுடனான ஒரு நீண்ட கோடைகாலத்திற்கான வாய்ப்பு உறுதியாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.

ஷஹமா “பொருளாதாரப் பேரழிவின் தொடக்கத்திற்கும் சமூகச் சீற்றத்திற்கும் இடையே சற்று கால இடைவெளி” அடிக்கடி காணப்படும், ஆனால் “அச்சம்மிக்க நோக்குநிலையின்மையின் ஆரம்பகட்டத்தை அடுத்து “கிளர்ச்சியின் ஒழுங்கமைக்கப்பட்ட அணிதிரளின்” ஆபத்து வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கிளர்ச்சி அதிசெல்வந்தர்கள் மற்றும் நெருக்கடிக்கு பொறுப்பானவர்கள் என்று காணப்படுபவர்களுக்கு எதிராக இருக்கும் என்றும், 1789 பிரெஞ்சுப் புரட்சியின் போது “செல்வம் படைத்த தன்முனைப்பு” நிறைந்தவர்கள் நினைவிற்கொள்ளும் விதத்தில் இலக்கு வைக்கப்பட்டது போலவே, “நம்முடைய சொந்த செல்வந்தர் குழுவினரையும்'' ஒப்பிட்டு எழுதுகிறார்.

மே 30ம் திகதி Observer ல் முன்னாள் ஆசிரியரும் இப்பொழுது பிரிட்டிஷ் பழைமைவாத-லிபரல் ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திற்கு பொதுத்துறை ஊதிய வெட்டுக்களுக்கு ஒரு ஆலோசகராக இருப்பவருமான வில் ஹட்டன், “ஐரோப்பாவின் வருங்காலம் ஆபத்தில் உள்ளது. யூரோவின் சிதைவின் சாத்தியம் ஒரு முதல்மட்ட பொருளாதார, அரசியல் பேரழிவாக அமையும். பொருளாதாரத்தில் இது ஐரோப்பாவை போட்டியிடும் நாணய மதிப்புக்குறைப்புக்கள், கடன்கள் திருப்பித் தராத நிலை, வங்கிப் பிணை எடுப்புக்கள், உறைந்துவிட்ட கடன் கொடுத்தல்கள், வணிகப் பாதுகாப்புக்கள் மற்றும் நீடித்த மந்தநிலை ஆகியவற்றிற்கு தள்ளும். அரசியலில், நம்முடைய வேற்றுமைகள் நிறைந்த கண்டத்தை ஒற்றுமையாக வைக்கும் உறுதிப்பாடு எப்படி இருந்தாலும், பழைய விரோதங்களும் சந்தேகங்களும் மேல்மட்டத்திற்கு அப்பால் இல்லாததால், அவை கரைத்துவிடும்… அதன் பின் வெளிப்படுவது 1930 களில் இருந்து ஐரோப்பிய நிலைமைக்கு அண்மித்ததாக இருக்கும். அச்சமும், மந்தநிலையும் தீய இனவெறிக்கும் தேசியவாதக் கொள்கைகளுக்கும் இலகுவான இரையாகும்.”

இதுவரை வந்துள்ளவற்றில் மிகவும் கூடுதலான தீர்க்கதரிசன எச்சரிக்கையாக என்ன வரக்கூடும் என்பது ஜேர்மனியின் சர்வதேச ஒளிபரப்பான Deutsche Welle ஆல் மே 26 அன்று கூறப்பட்டது. அதன் கட்டுரை 2008ல் உலகப் பொருளாதாரச் சரிவின் பாதிப்பு பற்றிய ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலர் பான் கி-மூன், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் மற்றும் உலக வங்கியின் தலைவர் ரொபேர்ட் ஜீலிக் ஆகியோர் கொடுத்த எச்சரிக்கைகளுடன் தொடங்குகிறது. உதாரணமாக ஸ்ட்ராஸ் கான், “பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகள் உட்பட பல நாடுகளில் சமூக அமைதியின்மை நிகழலாம்” என்று எச்சரித்திருந்தார்.

Deutsche Welle, இந்த எச்சரிக்கைகள் “மற்ற எந்த நேரத்தைக் காட்டிலும் பார்க்க தற்போதைய நிதிய நெருக்கடிக்கு நெருக்கமாக இருப்பதாகவும், 1929 நெருக்கடிக்கு பின்னர் இது மிக மோசமானது” என்று எழுதியுள்ளது.

கிரேக்கத்தில் நூறாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டம் செய்த்தை மேற்கோளிட்டு இதே விதி “நிதிய வகையில் நலிந்துள்ள ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி” போன்ற ஐரோப்பிய அரசாங்கங்களையும் சூழலாம், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் எழுச்சி பெறும் சமூக அமைதியின்மை பற்றி கவலைப் படுகின்றன” என்று அது எச்சரித்துள்ளது.

“இந்நாடுகளில் புகைந்து கொண்டிருக்கும் ஆழ்ந்த கோபம் உலகம் முழுவதும் அதே நிறுவனங்கள், அதே நபர்கள், உலக முதலாளித்துவத்தின் தோல்வி ஆகியவற்றிற்கு எதிராக கொதித்துக் கொண்டிருக்கிறது” என்று அறிக்கை தொடர்ந்து கூறியுள்ளது.

அமெரிக்கத் தேசிய உளவுத்துறையின் இயக்குனர், டெனிஸ் சி. பிளேயர் செனட் உளவுத்துறைக் குழுவிற்கு ஒரு தொடர்ந்த பொருளாதார நெருக்கடி என்பது “ஆட்சியை அச்சுறுத்தும் உறுதியற்ற தன்மையை அதிகமாக்குகிறது, இதில் அமெரிக்கா மட்டும் பாதிப்படையாது இருக்காது ” என்று எச்சரித்துள்ளதை மேற்கோளிடுகிறது.

European Laboratory of Political Anticipation எனப்படும் ஐரோப்பிய சிந்தனைக் குழுவின் தலைவர் Marie-Helene Caillol மற்றும் Trends இதழின் நிதிய, அரசியல் போக்குகள் கணிப்பாளரும், பதிப்பாளருமான Gerald Celente உடைய கருத்துக்களுடன் கட்டுரையை முடிக்கிறது

“இப்பொழுது கிரேக்கத்தில் நடைபெறுவது பொருளாதாரம் சரியும்போது உலகம் முழுவதும் பரவும்… அரசாங்கக் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் அனைத்து நாடுகளிலும் சமூக அமைதியின்மை தோன்றுவதை நாம் காண்போம். இவற்றில் வெளிப்படையாகத் தெரியும் நாடுகள் ஸ்பெயின், அயர்லாந்து, போர்த்துக்கள், இத்தாலி, ஐஸ்லாந்து, உக்ரைன், ஹங்கேரி ஆகியவை; இதைத் தொடர்ந்து இங்கிலாந்தும் அமெரிக்காவும் வரும்.” என்று Celente விளக்கியுள்ளார்.

“இந்த நெருக்கடி 1945ல் இருந்து நாம் அறிந்துள்ள உலக ஒழுங்கமைப்பின் முடிவுடன் நேரடியாகத் தொடர்புடையது-இன்னும் முன்னதாக ஐரோப்பாவின் காலனித்துவ நிகழ்வுப்போக்கு காலத்துடன் தொடர்புற்றது என்று கூடக் கூறலாம். எனவே கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்காவில் மையம் கொண்டிருந்த உலக கூட்டு முழுவதும் மெதுவாகச் சரிகிறது, அனைத்துவிதக் கொந்தளிப்புக்களையும் தோற்றுவிக்கிறது.” என்று Calliot கூறியுள்ளார்.

சமூக அமைதியின்மை எங்கு முடியும் என்று வினவப்பட்டதற்கு, அவர் விடையிறுத்தார்: “போர். இது அவ்வளவு எளிதானதும், கொடூரமானதும் ஆகும்.”

Calliol, Celente இருவருமே சமூக அமைதி அலைக்குப் பின்னணியில் கிளர்ச்சியூட்டுவோர் உள்ளன என்ற கூற்றை நிராகரித்தனர்.

“இந்த பிரதிபலிப்பின் பின்னணியில் எந்த அமைப்புக்களும் இல்லை-இது ஒரு பொதுஜன பிரதிபலிப்பு” என்ற Celente, மார்க்சின் மகத்தான படைப்பிற்கு அழைப்புவிடுகின்றார். “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்” என்பதின் 21ம் நூற்றாண்டுப் பதிப்புத்தான் இது. “பெரிய அளவில் இருப்பவை தோல்வி அடையக்கூடாது என்பதற்காகக் கொடுக்கப்பட்ட மகத்தான பிணை எடுப்பு பற்றியும் அதற்கு அவர்கள் விலை கொடுக்கமாறு கோரப்படுவதையும் மக்கள் நன்கு அறிவர். வரிகள் உயர்ந்தால், அதிக வேலைகள் இழக்கப்படும், இன்னும் அதிகளவிலான எதிர்ப்புக்கள் வெளிப்படும்”

இத்தகைய அறிக்கைகள் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் கண்டத்தில் சமூகப் புரட்சியின் பெருகும் ஆபத்தை பற்றித் தீவிரமாக உணர்ந்துள்ளனர் என்பதை நிரூபிக்கின்றன. மோசமான பொருளாதார நெருக்கடியின் தவிர்க்க முடியாத விளைவு நிலைமையில் இதைத்தான் அவர்களுடைய ஆலோசகர்கள் அவருக்குக் கூறிவருகின்றனர். ஆனால் பெருவங்கிகள் மற்றும் நிறுவனங்களின் நலன்களுக்காக முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் ஏற்றும் அவர்களுடைய முயற்சியலேயே இது இன்னும் உறுதியாகிறது. இவ்விதத்தில் தொழிலாளர்களால் முன்பு வெற்றிகொள்ளப்பட்டிருந்த சமூகநல திட்டங்கள் மற்றும் பணி நிலைமைகளில் எஞ்சியிருப்பவை அழிக்கப்படுகின்றன.

ஐரோப்பாவில் ஆளும் வர்க்கங்கள் பரந்துபட்ட தொழிலாள வர்க்கத்தின் போராட்ட எழுச்சிகளுக்கு பல மத்தியதர வர்க்க போலி இடது அமைப்புக்களுக்கு ஆதரவு கொடுத்து சோசலிச நனவை வளர்தலையும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் தடைப்படுத்த தயாரிப்பு செய்கின்றன. பிரான்ஸில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி, கிரேக்கத்தில் சிரிசியா போன்றவை இவ்வாறானவையாகும். இவை அனைத்துமே பெரும் அரசாங்க அடக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சிமுறை அறிமுகப்படுத்துவதற்குத்தான் தயாரிப்புக்களை செய்கின்றன.

தற்பொழுது ஆளும் வர்க்கம் அனுபவிக்கும் சாதகமான நிலைமை தொழிலாள வர்க்கத்திடம் தேவையான சோசலிச, புரட்சிகர முன்னோக்கு இல்லையென்பதுடன் தன் பதில்தாக்குதலை தொடக்கத் தலைமையும் இல்லாததுதான். மாறாக, தொழிலாளர்களை பிரதிபலிப்பதாக தவறாக விவரிக்கப்படுவது அனைத்தும் -எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்சங்கங்கள்- பெருவணிகத்தின் ஐந்தாம் படையாகத்தான் செயல்படுகின்றன.

கிரேக்கம், இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்றவற்றில் போல் இவை பல ஒருநாள் எதிர்ப்பு வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்தாலும், அல்லது பிரிட்டனின் தொழிற்சங்க காங்கிரஸ் போல் எதையும் செய்யவில்லை என்றாலும், இவை அனைத்தும் வர்க்கப்போராட்டத்தை வேண்டுமென்றே அடக்கியும், நசுக்கி வைப்பதன் மூலம் கடும் சிக்கன நடவடிக்கைகளையும் வெட்டுக்களையும் சுமத்துவதற்கான கருவியாகத்தான் செயல்படுகின்றன. தொழில்வழங்குனர்களுடனும் மற்றும் அவர்களின் முன்னாள் கூட்டணியான சமூக ஜனநாயக கட்சி அல்லது அதிபழைமைவாத அரசாங்கங்களுடனும் கையுடன் கையாக இணைந்து இயங்குகின்றன.

இறுதியில், இந்த உருவாக்கிக்கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டம், இந்த அமைப்புக்களை ஒரு பேரலைபோல் கடந்து சென்றுவிடும். உலக சோசலிச வலைத் தளம் இடைமருவு வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி திறமையுடன் கோடிட்டுக் காட்டிய முன்னாய்வைத்தான் பகிர்ந்து கொள்ளுகிறது: “மக்களுடைய நிலைநோக்கு முதலாவதாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் புறநிலை நிலைமையால்தான் நிர்ணயிக்கப்படும், இரண்டாவதாக, பழைய தொழிலாளர் அமைப்புக்களின் துரோக அரசியலால் நிர்ணயிக்கப்படும். இந்த இரண்டில் முதலாவதுதான் தீர்மானகரமானது: வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவவ அமைப்புகளைவிட வலிமை மிக்கவை”

இந்த முன்னாய்வு சுயதிருப்தி அல்லது விதிவிட்ட வழி என்பதற்கும் அப்பாற்பட்டு புரட்சிகரத் தலைமையின் முக்கிய பிரச்சினையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலக நெருக்கடியின் புரட்சிகர தாக்கங்களுக்கும் தற்போதைய தொழிலாள வர்க்கத்தின் தற்போதைய நனவுக்கும் இடையே உள்ள இடைவெளியை மூடக்கூடிய முன்னிபந்தனையான கருவி மார்க்சிச கட்சி ஒன்றுதான். ஒரு சோசலிச மாற்றீட்டின் தேவையை உணர்பவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதைக் கட்டிமைக்கும் முடிவை எடுக்க வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com