ஐ.நா பாதுகாப்பு சபையில் இலங்கைப் போர்குற்ற விவகாரம் விவாதிக்கப்படமாட்டாது.
இலங்கை விடயம் தொடர்பில் தற்போது ஐ நா வின் பாதுகாப்புச் சபையில் பரிசீலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோல்வியடையச் செய்துவிட்டதாக இலங்கை அரசு கூறி வரும் நிலையில், அப்போது இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் தேவை என்று குரல்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் அது குறித்து பரிசீலனைக்கான முன்னெடுப்புகள் இப்போதைக்கு இல்லை என்று தற்போது பாதுகாப்பு சபைக்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள மெக்ஸிகோ கூறியுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 14 ஆவது அமர்வில் தொடக்க உரையாற்றிய அதன் ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் போரின் இறுதிகட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை தேவை என்று கூறியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரும் இது தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க ஒரு வல்லுநர் குழுவை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதேவேளை இப்படியான அனைத்து கோரிக்கைகளையும் இலங்கை அரசு எதிர்த்தும் நிராகரித்தும் வந்துள்ளது.
இதன் பின்புலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை தற்போது ஏற்றுள்ள மெக்ஸிகோவின் தூதர் க்ளாட் ஹெல்லார் செய்தியாளர்களை சந்தித்த போதே, தற்போது பாதுகாப்பு சபையில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்கும் முன்னெடுப்புகள் இல்லை என கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையின் விவாத அட்டவணையில் இந்த விடயம் இல்லை. எனவே அது குறித்து விவாதிப்பதற்கு உறுப்பினர்களிடையே விருப்பமின்மையும் தயக்கமும் இருக்கின்றன.
எனவே பாதுகாப்பு சபை இது குறித்து நடவடிக்கையில் ஈடுபடுவதில் எதிர்ப்பு இருக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் தலைமைச் செயலர் நடவடிக்கை எடுக்கலாம் என்று நாம் கருதுகிறோம் என க்ளாட் ஹெல்லார் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment