செம்மொழி மாநாட்டில் எதிர்பார்ப்பது என்ன? கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.
கோவையில் தமிழக அரசு நடத்தவுள்ள செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், ஆய்விற்கும் என்ன செய்யப்பட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பை ஒரு கொள்கை அறிக்கையாக தமிழ் நேயம் நடத்திய கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.
கோவை அண்ணாமலை மன்றத்தில் ஞாயிற்றுக் கிழமையன்று தமிழ் விழா இலக்கியக் கருத்தரங்கு நடைபெற்றது. எழுத்தாளர் சூரிய தீபன் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில் வரவேற்புரை நிகழ்த்திய தமிழ் ஆர்வலரும், இலக்கிய முன்னோடிகளில் ஒருவருமான ஞானி, கோவையில் வரும் 23ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியை மேம்படுத்தக்கூடிய ஆய்வுகளை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசு உதவுவது தொடர்பான ஒரு தெளிவான திட்டத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இக்கருத்தரங்கில் ஞானியும், அவருடைய நண்பர்களும் உருவாக்கிய ‘தமிழியல் ஆய்வை மேம்படுத்தும் நோக்கில் ஒரு கொள்கை அறிக்கை’ வெளியிடப்பட்டது.
“கோவையில் நடைபெறவுள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழியல் ஆய்வுக்கு இப்பொழுது கிடைத்திருக்கிற மிகப் பெரிய வாய்ப்பு. இந்திய வரலாற்றில் தமிழர்களின் பங்கு மிகப் பெரியது. இந்திய நாகரிகத்தின் அடித்தளம் முழுவதும் தமிழர் நாகரிகம்தான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம்தான் என்பதில் இப்பொழுது எவருக்கும் ஐயமில்லை. ஆதிச்சநல்லூர் பற்றியும் அது பற்றிய அண்மைக்கால ஆய்வையும் விரிவாக அறிகிறோம். பூம்புகார் கடலியல் ஆய்வு தமிழர் வாழ்வை 11,500 ஆண்டுகளுக்கு முன் கொண்டுச் செல்கிறது. உலகளவில் நூற்றுக்கணக்கான மொழிகளில் தமிழ் இடம் பெற்றிருப்பதையும் ஆய்வாளர் தொடர்ந்து ஆய்ந்து வருகின்றனர்.
ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியா முழுவதும் தமிழர் பரவியிருந்தனர். இந்திய வரலாற்று ஆய்வைத் தென்னிந்தியாவில் இருந்துதான் தொடங்க வேண்டு்ம என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். இந்திய நாகரிகத்தின் அடித்தளம் என்று அறியப்படுகிற வேளாண்மை, நீர்ப்பாசனம், கால் நடை வளர்ப்பு, சிற்பம், மருத்துவம், இசை, கணிதம், வானவியல், தர்க்கம், மெய்யியல் முதலிய அனைத்துக் களங்களுள்ளும் தமிழரின் பங்களிப்பே முதன்மையானது. தமிழைச் செம்மொழியென நிறுவும் முறையில் இந்தியா மற்றும் உலகு தழுவிய இவ்வாய்வை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கான அறிவுத் தரமும் ஆய்வுத் திறமும் நமக்கில்லாமல் இந்தியச் சூழலில் இன்று நம்மை நிறுவிக் கொள்ள முடியாது. இந்திய வரலாற்றில் தமிழர்களின் தொன்மையான வரலாறு, நாகரிகம் பற்றி நாம் விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. சங்க இலக்கியங்கள் முதலியவை இதற்குச் சான்றாகின்றன. இந்தியாவின் அரசியல், பொருளியல், பண்பாடு முதலியவற்றில் தமிழர் தமக்கென இடத்தை பெறும் முறையில் நமக்கு ஆய்வுகள் தேவை.
செம்மொழி மாநாடு ஏன்?-இன்று தூர்தர்ஷனில் கருணாநிதி உரை
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து முதல்வர் கருணாநிதி இன்று தொலைக்காட்சியில் உரை நிகழ்த்துகிறார். இன்று இரவு சென்னை தொலைக்காட்சியில் இந்த உரை ஒளிபரப்பாகிறது. அதில் முதல்வர் கூறியிருப்பதாவது:
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே- செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல் இப்பொழுதுதான், 2004ம் ஆண்டில்தான்- அதுவும், மத்தியிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பின்னர்தான் நமக்கு கிடைத்துள்ளது.
இந்தப் பெருமையைக் கொண்டாடிடும் வகையில்தான் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது!. இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் பலர் வருகை தருகிறார்கள்!.
குறிப்பாக, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் துறைத் தலைவராக விளங்கும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் வருகிறார்.
அவர், எல்லாத் தகுதிகளையும் கொண்டுள்ள தமிழ் இதுவரை, செம்மொழி என அங்கீகரிக்கப்படவில்லையா? எனக்கேட்டு வருந்திக் கொண்டிருந்தவர்.
அதேபோல, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா என்னும் பேரறிஞர் வருகிறார். அவர், தனது ஆராய்ச்சி மூலம், சிந்து சமவெளி நாகரிகத்தையும் அங்கு கிடைத்துள்ள எழுத்து வடிவங்களையும் ஆராய்ந்து, அவை திராவிட நாகரிகத்தைச் சேர்ந்தவை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் செம்மொழித் தமிழாய்வு, மத்திய நிறுவனம் வழங்கும், கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினைப் பெற விருக்கிறார்.
இவர்களைப் போல உலகெங்கும் 49 அயல்நாடுகளிலிருந்து 536 தமிழறிஞர்கள் இந்த மாநாட்டிலே பங்கு பெறுகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட இந்தியாவிலிருந்து ஏறத்தாழ 5,000 அறிஞர்கள் பங்கு பெறுகின்றனர். மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்கள் 23.6.2010 அன்று காலையில் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்
எனவே, அருமைத் தமிழக மக்களே!
நமது தமிழ் மொழிக்குச் சிறப்புகள் சேர்க்க, தமிழ்ச் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் அய்யன் திருவள்ளுவர் தந்த மணிமொழி மண்ணில் சமதர்மம் படைத்திட வழி வகை காண்போம்!.
கோவை மாநகர் நோக்கி வருக வருக என அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.
இவ்வாறு உரையாற்றியுள்ளார் கருணாநிதி.
செம்மொழி மாநாடு-பாதுகாப்புப் பணிக்கு 60 வெடிகுண்டு நிபுணர்கள்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் எந்தவிதமான அசம்பாவதிமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கு 60 வெடிகுண்டு நிபுணர்கள் முகாமிட்டு அங்குலம் அங்குலமாக நகரையே அலசவுள்ளனர் என்று மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமிஷனர் சைலேந்திர பாபு அளித்துள்ள பேட்டியில், கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல்தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதிலுமிருந்து 60 வெடிகுண்டு நிபுணர்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நகரின் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்வார்கள்.
இவர்கள தவிர 20 மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கோவை விமான நிலையம் , ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment