புலம்பெயர் தமிழர்களின் ஈழக்கனவினால் இங்குள்ள தமிழர்கள் காயப்படுகின்றனர்.
புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் ஈழக் கனவினால் தமிழ் மக்களே காயப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமிழீழக் கோரிக்கையை கைவிட மறுப்பதனால், தமிழ் மக்களே பாதிக்கப்படப் போவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் புலம்பெயர் மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழீழ இராச்சிய கோரிக்கை பெரும்பான்மை இலங்கை மக்களுக்கு எந்த வகையிலும் நன்மை அளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போதோ எதிர்காலத்திலோ தமிழீழ இராச்சியமொன்றை அமைக்க முடியாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்திலேயே ஈழ இராச்சியம் என்பது ஓர் கனவாகவே காணப்பட்டதாகவும், தற்போது ஈழ இராச்சியம் என்பது கனவுகளின் கனவாக மாற்றமடைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரனினால் சாதிக்க முடியாதவற்றை இந்த புலம்பெயர் தமிழர்களினால் சாதிக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருபோதும் இவர்களினால் ஈராக்கியமொன்றை உருவாக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்தின் ஒரு பகுதியினரிடையே தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தமிழர்களின் வாழ்க்கை நெருக்கடி மிகுந்ததாக மாற்றமடையும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவது குறித்து புலம்பெயர் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களுக்கு காத்திரமான பங்களிப்பினை நல்குவதே புலம்பெயர் சமூகத்தின் தற்போதைய கடப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பிரபல இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களே இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கவனிக்குமாறு அமைச்சர் தேவானந்தா தமிழக அரசியல்வாதிகளிடம் கோரியுள்ளார்.
0 comments :
Post a Comment