நக்சல் வேட்டை: இந்திய அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது
நக்சலைட்டுகளுக்கு எதிரான வேட்டையின்போது உயிரிழந்த நக்சலைட்டுகளை, விலங்குகளைப்போன்று மூங்கில் கம்புகளில் கட்டி சிஆர்பிஎப் படையினர் தூக்கிச் சென்றது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சா வனப்பகுதியில் கடந்த ஜூன் 16 ஆம் தேதியன்று நகசலைட்டுகளுக்கு எதிராக, சிஆர்பிஎப் படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது நடைபெற்ற மோதலில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 3 பேர் பெண்கள்.
இந்நிலையில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் உடல்களை, இறந்த விலங்குகளை கொண்டு செல்வதுபோன்று மூங்கில் கழிகளில் தூக்கி கொண்டு சென்றனர் சிஆர்பிஎப் படையினர்.
கொல்லப்பட்டது நக்சலைட்டுகளே ஆனாலும், மனித உடலுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச மரியாதையைக் கூட அளிக்காமல் அவர்களை விலங்குகளைப்போன்று கேவலமாக கொண்டு சென்ற மத்திய ரிசர்வ் காவல் படையினரது இந்த செயல், புகைப்படங்களாக பத்திரிகைகளிலும், வீடியோ காட்சிகளாக தொலைக்காட்சிகளிலும் வெளியானது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும் மத்திய ரிசர்வ் காவல் படையினரது இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று குற்றம் சாற்றியிருந்தனர்.
இந்நிலையில் இது குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை பார்த்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஊடகங்களில் வெளியான செய்திகள், வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில் இது தொடர்பாக வருகிற ஜூலை 27 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தாக்கீதும் அனுப்பியுள்ளது.
இத்தகவலை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது மிக மோசமான மனித உரிமை மீறல்களாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
0 comments :
Post a Comment