பள்ளிக்கூட கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி
பள்ளிக்கூட கழிப்பறையில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு ராமநாதபுரத்தில் நடந்துள்ளது. ராமநாதபுரம், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. சம்பவத்தன்று இந்த பள்ளிக்கூடத்தின் கழிப்பறையில் குழந்தை அழும் குரல் கேட்டது. உடனே மாணவிகள் சென்று பார்த்தபோது, அங்கே சில நிமிடங்களுக்கு முன்பு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது.
இது குறித்து நடந்த விசாரணையில் அந்த பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கழிப்பறையில் பிரசவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் கொடுக்கப்பட்டு அம்மாணவி நீக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி தாளாளர் தேவமனோகரன் மார்ட்டின் கூறுகையில், ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது தந்தை அயல்நாட்டில் வேலைபார்த்து வருகிறார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அவர் அடிக்கடி கழிப்பறைக்கு சென்றார். ஆசிரியர்களிடம் தனக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறினார். ஆசிரியர்கள் அம்மாணவிக்கு மாற்று உடை ஏற்பாடு செய்து வழங்கினர்.
ஆனால் அதற்கு பின்னும் ரத்தப்போக்கு அதிகமானது. உடனடியாக அவரின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாயுடன் மருத்துவமனைக்கு செல்லுமாறு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் சிறிது நேரத்தில் கழிப்பறையில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே சில மாணவிகள் கழிப்பறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்தன.
மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆசிரியர்கள் குழந்தையை எடுத்து வந்து பத்திரப்படுத்தினர். ரத்தப்போக்கு உள்ளதாக கூறிய மாணவி மீது சந்தேகம் ஏற்படவே, நானும், ஆசிரியர்களும் அந்த மாணவியையும் அவரது தாயாரையும் வரவழைத்து விசாரணை நடத்தினோம்.
அப்போது அந்த மாணவி கழிவறையில் கிடந்த குழந்தை தனக்கு பிறந்ததுதான் என்று ஒப்புக்கொண்டார். திருமணம் ஆகாத அவர் திருவிழாவின் போது ஏற்பட்ட தகாத உறவால் கர்ப்பிணியாகியுள்ளார். பள்ளி கழிப்பறையில் குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை அந்த மாணவியே அங்கிருந்த கண்ணாடி துண்டுகளால் கீறி துண்டித்துள்ளார். பின்னர் குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு வகுப்புக்கு வந்துவிட்டதாக கூறினார்.
இதனால் அந்த குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தது. இதை தொடர்ந்து மாணவியின் தாய் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களின் ஒப்புதலின் பேரில் மாற்றுச்சான்றிதழ் கொடுக்கப்பட்டது. குழந்தையும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் எதிர்கால நலன் கருதி இது குறித்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இது குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தலைமையாசிரியர் ஜுடித்தாசன் விளக்கம் அளித்துள்ளார் என்று தேவமனோகரன் கூறினார்.
0 comments :
Post a Comment