ஜனாதிபதியுடன் சேர்ந்து வேலை செய்வதில் த. தே. கூ ற்கு மன மகிழச்சியாம்:
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று நேற்று ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். அச்சந்திப்பின்போது எமது முழுமையான ஒத்துழைப்பை தங்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதிக்கு உறுதிமொழி கூறியுள்ள சம்பந்தன், தாங்கள் சர்வகட்சி கூட்டமொன்றை கூட்டி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல்வேறு செயற்பாடுகள் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள். தங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எமது விருப்பமாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவருமான ஆர். சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் சந்திப்பு தொடர்பாக லங்காபுவத் இற்கு கருத்து தெரிவித்த ஆர் சந்தந்தன், தமது கட்சி இலங்கையின் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்த்தனா, ஆர். பிறேமதாஸ, சந்திரிகா குமாரணதுங்க ஆகியோருடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதாகவும் ஆனால் அப்பேச்சுவார்த்தைகள் எதுவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்றதுபோல் ஆக்கபூர்வமானதாகவும் பலன்தரகூடியதாகவும் அமைந்திருக்கவில்லை என மகிந்தவிற்கு புகழாரம் சூட்டியதாக லங்காபுவத் தெரிவிக்கின்றது.
வடக்கு மக்களின் பிரச்சினைகளில் பலவற்றுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் தீர்வைப் பெற்றுத் தர முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான நீண்ட நேர சுமுகமாக நடந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். வட பகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடமாடும் கச்சேரி முறையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்மூலம் திருமண, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை விரைவில் பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன், தற்போது தடுப்புக் காவலில் உள்ளவர்களில் நீதிமன்ற செயற்பாடுகளின் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களை சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மீள்குடியேற்ற நடவடிக்கை முறையாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும், கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் பாதுகாப் பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும், இதனால் வட பகுதி மக்களின் நிலை தொடர்பாக கண்டறி வதற்காக பாராளுமன்றத்துக்கு தெரிவான புதிய உறுப்பினர்கள் குழுவொன்றை அங்கு அனுப்பிவைத்ததாகவும், இந்த குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்குப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வட பகுதி மக்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அறுவடை பெற்றுக் கொள்ளும் வரை அந்த மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதிகளின் தேவை நிறைவேறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த எவருக்கும் இடம் கிடைக்காது என்றும், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் சமாதான நாட்டை உருவாக்கவும், மீண்டும் வடக்கில் மக்கள் அழிவுக்கு உள்ளாகும் யுகத்துக்கு இட்டுச் செல்லப் போவதில்லை யென ஜனாதிபதி தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அதற்கு தேவைப்படுவதாகவும், அனைத்துத் தீர்வுகளும் அனைத்து மக்களுடனும் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்றும், அவசரமாக தீர்வை பெற்றுத் தருவது பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இதனால், கிரமமாக திட்டமிடப்பட்ட வகையில் செயலாற்றுவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இங்கு பேசிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் பிரதேசங்களில் சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி, மத தலங்க ளின் அபிவிருத்தி ஆகியவை பற்றி அவ தானம் செலுத்தப்படுமென குறிப்பிட்டார்.
இதன்படி 75 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைக ளுக்கு விவசாய திணைக்களம் மாகாண சபைகளுக்கு 100 உழவு இயந்திரங்களை வழங்கியுள்ளது. அத்துடன் மேலும் 500 இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த சந்திப்பில் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் சார்பில் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஏ. விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், என். சிவசக்தி ஆனந்தன், பொன். செல்வராஜ், பி. அரியனேந்திரன், யோகேஷ்வரன், பி. பியசேன, சரவணபவன், எஸ். ஸ்ரீதரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோரும்
அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ், நிமல் சிரிபால டி சில்வா, டலஸ் அலஹப்பெரும, மற்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, சரத் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment