Monday, June 7, 2010

என்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட கருணாநிதி சதி: ஜெயலலிதா

தம்மை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி சதி செய்வதாக அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சா‌ற்‌றியுள்ளார். இது தொட‌‌ர்பாக அவர் இன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், த‌ன் ‌மீது‌ள்ள வழ‌க்குக‌ள் கு‌றி‌த்து மே‌ல் நடவடி‌க்கை தேவை‌யி‌ல்லை என தன‌க்கு‌த் தானே ‌நீ‌தியை வழ‌ங்‌கி‌க் கொ‌ண்ட த‌ன்னலவா‌தி கருணா‌நி‌தி, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் எனது வழக்கு குறித்தும், நீதிமன்றம் மூலம் நிரபராதி என நிரூபிக்கப்பட்ட வழக்குகள் குறித்தும் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு வருகிறார். மாநிலத்தில் உள்ள பிரச்னைகள் மீது கருணாநிதிக்கு அக்கறை இல்லாததையும், என்மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே அவரிடம் மேலோங்கி இருப்பதையு‌ம் தெ‌ளிவா‌க்கு‌கிறது.

பூந்தமல்லி அருகே ஒரு ரவுடி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை, திருச்சி பஞ்சாயத்து கவுன்சில் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல், சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை, ஓய்வுபெற்ற காவல் துறை சார் ஆய்வர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை, ஜாமீனில் வெளிவந்த இருவர் ஒசூர் அருகே வெட்டிக்கொலை, புளியந்தோப்பில் ரவுடி வெட்டிப் படுகொலை, ஏ.டி.எம். மைய காவலாளி படுகொலை, சைதாப்பேட்டையில் ரவுடி கழுத்தறுத்து கொலை என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு கடந்த நான்கு நாட்களில் மட்டும் பல்வேறு கொலைகள் நடைபெற்று இருக்கின்றன. காவல் துறையினர் ரவுடிகளை பார்த்து அஞ்சி நடுங்குகின்றனர். இந்த அளவுக்கு தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.

தமிழக மக்களின் முக்கிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்திருப்பது விண்ணை முட்டும் விலைவாசி. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டுமல்லாமல், நோட்டுப் புத்தகங்கள், காய் கனிகள், நூல், பால் மற்றும் பால் பொருட்கள் என அனைத்துப் பொருட்களின் விலையும் விஷம் போல் உயர்ந்து கொண்டே செல்கின்றன.

ஒரு கிலோ கொத்தமல்லி கட்டு 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலைவாசி ஏறுவதற்கு முக்கிய காரணமே பதுக்கல் தொழிலையும், கடத்தல் தொழிலையும் ஊக்குவிப்பதால் தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். 20 ரூபாய்க்கு உணவகங்களில் சாப்பாடு போடப்படும் என சென்ற ஆண்டு தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்டது என்ன ஆயிற்று என்பதை கருணாநிதியால் விளக்க முடியுமா?

தமிழகத்தில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக தொழில் உற்பத்தியும், வேளாண் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும், ஊதிய இழப்பும் ஏற்பட்டுள்ளது.

நிலக்கரியின் விலை உயர இருப்பதாக செய்தி வந்துள்ளது பற்றியும், தமிழ்நாடு மின்சார வாரியம் காற்றாலைகளிடமிருந்து மின்சாரத்தை பெறுவதில் சுணக்கம் காட்டி வருவதாக வந்துள்ள செய்தி குறித்தும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 12 மணி நேர மின்வெட்டு நிலவுவது பற்றியும் கருணாநிதிக்கு தெரியுமா

என்னை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும். எனவே, என்மீதான வழக்குகள் குறித்து அறிக்கைகள் விடுவதில் நேரத்தை வீணடிக்காமல், தமிழக மக்களின் முக்கியப் பிரச்னைகளான சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குழ்நீர்ப் பிரச்சனை, தொழில் உற்பத்தி குறைவு, விவசாய உற்பத்தி பாதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் அது தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எ‌ன்று ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com