எந்த அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. டாருஷ்மன்
ஐநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட ஆலோசனைக் குழுவின் தலைவர் மர்ஸுக் டாருஷ்மன் ஒஸ்ரேலிய வானொலிக்கு வழங்கியுள்ள நேர்காணலின் சில பகுதி கீழே தரப்பட்டுள்ளது.
இலங்கை அரச படைகளும் விடுதலைப் புலிகளும் இடையே நடைபெற்ற இறுதிப்போரில் இரண்டு தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஐநா செயலாளர்நாயகத்திற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழு இது. போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முற்பட்டவர்கள் கொல்லப்பட்டது குறித்தும் இது விசாரணை நடாத்தும். எனினும் இந்த நடவடிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு கோபமூட்டியுள்ளது. இந்த ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு வர விஸா வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசு வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறது.
டாருஷ்மன்: இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி தனக்கு ஆலோசனை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த ஒரு குழு இது.
லியாம்: இந்தக்குழு பெரும்பாலும் ஆலோசனை வழங்கும் நடவடிக்கையையே மேற்கொள்ளும் என்று ஐநாவின் பேச்சாளர்; தெரிவித்திருக்கிறார். ஆக, இந்தக்குழு இலங்கை அரசின் விசாரணைகளுக்கு உதவி வழங்குமா? அல்லது சுதந்திரமாக விசாரணையை மேற்கொள்ளுமா?
டாருஷ்மன்: இது ஐநாவின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துடனான எந்த உறவும் தொடர்பும் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தூடாகவே இடம்பெறும்.
லியாம்: ஆக, நீங்கள் சொல்கிறீர்கள் இது இலங்கை அரசாங்கத்துடைய விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதென்பதல்ல சுதந்திரமாக விசாரணைகளை மேற்கொள்ளும் என்று?
டாருஷ்மன்: நாங்கள் ஒரு போதும் எந்த அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட வழிமுறைகளிலேயே தங்கி நிற்கிறோம்.
லியாம்: இந்த ஆலோசனைக்குழுவின் விசாரணைகளுக்கு தாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் தெரிவித்திருக்கின்றனரே? இது உங்களுடைய பணிகளை எவ்வாறு பாதிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
டாருஷ்மன்: இதற்கு நான் அபிப்பிராயம் எதனையும் சொல்லப் போவதில்லை. நாங்கள் செயலாளர் நாயகத்தைச் சந்தித்த பின்னரே எங்களுடைய பணி என்ன என்பது எங்களுக்குச் சரியாகத் தெரிய வரும்.
லியாம்: விசாரணைகளில் எவ்வாறான சவால்கள் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
டாருஷ்மன்: விடயங்களைச் சேகரிப்பதும் முன்வைப்பதுமான ஆலோசனைக்குழுவின் பணிகள் சவாலானவை தான். அது நாட்டுக்கு உள்ளே என்றாலென்ன. அல்லது நாட்டுக்கு வெளியே என்றாலென்ன? ஆனால் இதில் உள்ள துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்த ஆலோசனைக்குழு தனக்குக் கிடைக்கும் விடயங்களை இலங்கை அரசாங்கத்துடன் சரிபார்க்க வாய்ப்பில்லாது போய்விடுவது தான்.
லியாம்: எனக்குத் தெரியும் இந்தக் கேள்வி இவ்வளவு விரைவாகக் கேட்கப்படக் கூடியதன்று. ஆனாலும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா கள நிலைமைகளை அவதானிப்பதற்கு இலங்கை செல்வதற்கு உங்களுக்கு விசா கிடைக்குமென்று.
டாருஷ்மன்: நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். இந்த ஆலோசனைக்குழு தனது பணிகளைச் செய்வதற்கான வாய்ப்பு பெருமளவில் இருக்கும் என்று. ஆனாலும் மீண்டும் நான் இங்கே வலியுறுத்த விரும்புவது இலங்கைக்குப் போவதற்கான வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ என்பதைப் பொறுத்தல்ல இவ்விடயத்தை நாங்கள் மேற்கொள்ள ஆரம்பித்தது. நாங்கள் போவதா இல்லையா என்பதை செயலாளர் நாயகம் தீர்மானிப்பார்.
லியாம்: எப்போது இந்தக்குழுவினரின் விசாரணைகள் ஆரம்பமாகும். அது முடிவடைய எவ்வளவு காலம் எடுக்கும்?
டாருஷ்மன்: நாம் இப்போதே பணிகளை ஆரம்பிக்கலாம். நான்கு மாதங்களுக்குள் இவ்வாலோசனைக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். எனவே நாம் உடனடியாகப் பணிகளை ஆரம்பித்தாக வேண்டும். ஐநா செயலாளர் நாயகத்தினதோ அல்லது அவருடைய அலுவலகத்தினதோ மேலதிக ஆலோசனைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதன்பிறகு ஆலோசனைக்குழுவின் முழுக்காலத்திற்குமான திட்டம் வரையப்படும் எந்தவிதமான அறிக்கைகளையும் நாம் வெளியிட முதல் ஆலோசனைக்குழுவின் பணிகள் திட்டமிடப்பட வேண்டும்.
லியான்: இவ்வாலோசனைக்குழு பாரியளவிலான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதென கண்டடையுமானால் போர்க்குற்ற நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என செயலாளர் நாயகத்திற்கு நீங்கள் பரிந்துரைப்பீர்களா?
டாருஷ்மன்: அதனைப் பின்னர் பார்ப்போம். ஒரேயடியாக நாங்கள் இப்போது குதித்துப் பாயத் தேவையில்லை. ஆனால் சரியான வழிமுறைகள் மூலம் உண்மை நிலவரத்தை உலகின் முன் வைப்போம்
நன்றி: ஒஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்
0 comments :
Post a Comment