போர் குற்ற விசாரணை : பான் கீ மூனுக்கான ஆலோசனைக் குழு நியமனமாகிறதாம்:
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவை ஒரு சில நாட்களில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அறிவிக்கவுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்று திரும்பிய ஐ.நா.வின் அரசியல் விவகாரக் குழுவின் தலைவர் லின் பாஸ்கோ இத்தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு 37 ஆண்டுகளாக நடத்திய போரில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றிற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணபது தொடர்பாக இக்குழு ஐ.நா.பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க அரசப் படைகளுககும் இடையே நடந்த மோதல்களில் 1,00,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா.மதிப்பீடு செய்துள்ளது. அரச படைகளுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் கூறப்படும் போர்க குற்றங்கள் தொடர்பாக எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுத்து அதனை உறுதி செய்ய வேண்டும் என்பதனை இக்குழு ஐ.நா.பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்கும்.
உலக நாடுகளாலும், தமிழர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆலோசனைக் குழுவின் நியமனம் தொடர்பான அறிவிப்பை அடுத்த வாரம் பான் கி மூன் வெளியிடுவார் என்பது பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாஸ்கோவின் வார்த்தைகளில் இருந்து தெளிவாகிறது.
ஐ.நா.நிபுணர் குழு அமைக்கும் அதே நேரத்தில், உள்நாட்டுப் போர் குறித்து 'போரினால் கற்றப் பாடங்கள் மற்றும் இணக்கப்பாடுகள்' என்ற பெயரில் சிறிலங்க அதிபர் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தின் செயல்பாட்டையும் ஐ.நா. கூர்ந்து கவனிக்கும்.
பிபிசி தொலைக்காட்சிக்கு தனது இலங்கைப் பயணம் குறித்துப் பேசிய லின் பாஸ்கோ, 'அங்கு அரசியல் ரீதியான இணக்கப்பாட்டை நோக்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக மிக அவசரத் தேவையாகும்' என்று கூறியுள்ளார்.
பல பத்தாண்டுகளாக வளர்ந்த இரண்டு இனங்களுக்கும் இடையிலான பிளவும், கசப்புணர்வும் ஒரு இரவில் மறைந்துவிடாது என்று கூறியுள்ள பாஸ்கோ, அந்த காயங்களுக்கு மருந்திடவும், போருக்குக் காரணமான அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
போரினால் இடம் பெயர்ந்த மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தும் அரசின் செயல்பாடு திருப்தியளிக்கிறது என்றும், சிறுவர்கள் பள்ளிகளுக்குச் செல்கின்றனர், மக்களுக்கு உணவும், மருத்துவமும் கிடைக்கிறது என்றும், ஆனால் வீடு கட்டத் தேவையான பொருட்களை பெருவதுதான் பிரச்சனையாக உள்ளதென பாஸ்கோ கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment