Friday, June 11, 2010

டக்ளஸை கைது செய்யக்கோரும் மனுமீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றில்.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவுடன் டெல்லி வரும்போது கைது செய்யவேண்டும் என இந்தியாவின் பல தரப்பினரிடமிருந்தும் குரல் எழுப்பப்பட்டிருந்ததுடன் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பிபிசி தமிழ் சேவை இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இந்நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, தான் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி என்பதை அறிந்திருக்கவில்லை எனவும் 1987 ம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அவற்றை எதிர்கொள்ள தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சூழைமேட்டுப்பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தும் நால்வர் காயமடைந்துமிருந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தா பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்ததுடன், நீதிமன்றில் தொடர்ந்து ஆஜராகமையை அடுத்து நீதிமன்றினால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் 10 சிறுவன் ஒருவனை கடத்தி 7 லட்சம் இந்திய ரூபாய்களை கப்பமாக பெறமுயன்ற வழக்கொன்றும் இவர்மீதுள்ளது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா கனடா ஆகிய நாடுகளுக்கு ஆட்களை கடந்திவந்த இலங்கையைச் சேர்ந்த முகவர் ஒருவரது மகனே டக்கிளசினால் கடத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினுடாக தமிழ் போராட்ட அமைப்பினர் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாயினும் இவ்வாறான சமுகவிரோத செயல்களுடன் தொடர்புடைய சம்பவங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதா என்பது கேள்வி. மேலும் இந்தியாவில் எவ்வாறான வழக்குகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்பது ஆராயப்படவேண்டியது.

இந்தியாவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்த பல இயக்க உறுப்பினர்கள் சிறைகளிலிருந்து சட்டரீதியாக விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. ஆனால் நீதிமன்றினால் தேடப்பட்டும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த ஒருவர் மீதான பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளதா என்பது இன்று சென்னை நீதிமன்றில் மனு விசாரணைக்கு வரும்போது தெளிவாகும். ஏவ்வாறாயினும் இவ்வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது என்பது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதிலிருந்து உறுதியாகியுள்ளது. அன்றில் மனு நிராகரிக்கப்பட்டிருக்வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com