Tuesday, June 1, 2010

தனுன நீதிமன்றில் ஆஜராக வேண்டும் அன்றில் அசையும் , அசையா சொத்துக்கள் பறிமுதல்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவை எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு கோட்டை மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகு மாறும் அவ்வாறு ஆஜராகத் தவறினால், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதவானும் மேலதிக மாவட்ட நீதிவானுமான லங்கா ஜயரட்ன நேற்று உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவு தொடர்பாக நாடு முழுவதும் பொது அறிவிப்பை மேற்கொள்வதுடன், தனுன நாட்டில் மிகவும் தேவைப்படும் மனிதன் என சிங்களத்திலும் தமிழிலும் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை நீதிமன்ற வளவிலும் மற்றும் பொது இடங்களிலும் ஒட்டுமாறும் நீதிவான் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் தனுன திலகரட்ன எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதைக் கூறும் அறிவித்தல்கள் பலவற்றை தயார்படுத்துமாறும், தனுன திலகரட்னவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பற்றிய முழுமையான அறிக்கையொன்றை அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இரகசிய பொலிஸாருக்கு நீதிவான் மேலும் உத்தரவு பிறப்பித்தார்.

ஹைகோர்ட் நிறுவன மோசடி வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான தனுன திலகரட்னவை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவின் பேரில் தனுனவை கைது செய்யுமாறு கூறும் சுவரொட்டிகள் நேற்று நீதிமன்ற வளவிலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் சந்தேக நபரான தனுன திலகரட்ன நீதிமன்ற உத்தரவுகள் பலவற்றை அசட்டை செய்துள்ளதை அவதானித்திருப் பதாக குறிப்பிட்ட நீதவான், தனுனவின் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை பற்றிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து இரகசிய பொலிஸார் விடுத்த அறிக்கையில் சந்தேக நபரான தனுன திலகரட்ன மாறுவேடத்தில் வசித்து வருவதாகவும் அவரது நடையுடை பாவனையை அவர் மாற்றிக்கொண்டுள் ளதாகவும் கூறினர்.

சந்தேக நபரான தனுன திலகரட்னவை கைதுசெய்ய வேண்டுமென்றும், அவருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதாகவும் அரச தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஜனக பண்டார நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

இதேவேளை ஹைகோர்ட் நிறுவன பணிப்பாளரான வெலிங்டன் டியோட் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சரத் சிரிவர்தன, தனது கட்சிக்காரரை பிணையில் விடுமாறு கேட்டுக்கொண்டார். எனினும் நீதிவான் அவரது பிணை மனுவை நிராகரித்ததுடன் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி வரை வெலிங்டன் டியோட் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர விட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com