Thursday, June 24, 2010

ஆப்கானிலுள்ள அமெரிக்க இராணுவ தளபதி ஒபாமா நிர்வாகத்தை சாடுகின்றார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் கூட்டணிப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் மெக்கிறிஸ்டல், ஒபாமா நிர்வாகத்தைப் பற்றி கேலிக் கூத்தாகவும் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் குறைகூறி பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அந்தச் செயல் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ராபர்ட்ஸ் கிப்ஸ் தெரிவித்துள்ளார். அதனால் ஜெனரல் மெக்கிறிஸ்டலை வாஷிங்டன் வரும்படி வெள்ளை மாளிகை கட்டளை பிறப்பித்துள்ளது.

மேலும் அவர் கூறுகையில், ஜெனரல் மெக்கிறிஸ்டல் செய்தது மகா தவறு. இதில் ஒன்றும் சந்தேகமில்லை. அவர் எந்த உலகத்தில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார் என்பதை அறிந்துகொள்வதற்காகவே அவர் இங்கு அழைக்கப் பட்டுள்ளார் என்றார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை இவரை மட்டுமே நம்பியில்லை. அப்படையின் போர் வல்லமை ஓர் ஆள் மட்டும் முடிவு செய்யப்படும் ஒன்றல்ல என்று சாடியுள்ளார்.

அமெரிக்க தற்காப்பு அமைச்சரான ராபர்ட்ஸ் கேட்ஸ், ஜெனரல் மெக்கிறிஸ்டலின் செயலை வன்மையாகச் சாடி கடுமையான வார்த்தைகளில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், அச் செயல் தமக்கு வருத்தத்தைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஜெனரல் மெக்கிறிஸ்டல் தவறு செய்துவிட்டார். அதற்காக அவர் என்னிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அதே போல் யார் யாரைப் பற்றியெல்லாம் அவர் குறை கூறியிருந்தாரோ அவர்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இருந்தாலும் அவரிடம் இதுபற்றி நேரிடையாக விவாதிப்பதே சரியானது என்பதால் அவரை வாஷிங்டனுக்கு வரும்படி கூறியிருக்கிறேன் என்றார்.

இதுபற்றி கருத்துக் கூறிய அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெனரல் மெக்கிறிஸ்டலின் இந்தச்செயல் தவறான ஒன்று என்று கூறியுள்ளார். இது பற்றி அவரிடம் நேரிடையாகப் பேசிய பிறகுதான் அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

ஜெனரலின் பதவி பறிக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் வெள்ளை மாளிகை இது பற்றிக் கருத்துச் சொல்ல மறுத்து விட்டது. ஆனால் அதற்கு முன்னதாக ஜெனரல் மெக்கிறிஸ்ட், தம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com