ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி: வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட பலர் கைது!
சிறுவனை கடத்தி கப்பம் பெற்ற டக்ளஸை கைது செய்யவேண்டும்.
ஜனாதிபதி மஹிந்து ராஜபக்ச டெல்லி வருவதைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்க தூதரகத்தை நோக்கி கருப்புக் கொடியுடன் புறப்பட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள் பழ.நெடுமாறன், வைகோ, நல்லக்கண்ணு, மகேந்திரன், பெ.மணியரசன் உள்ளிட்ட தலைவர்களுடன் பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை நோக்கி கருப்புக் கொடியுடன் பேரணியாக செல்வதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள், மயிலையில் உள்ள நாகேஸ்ர ராவ் பூங்கா அருகே கருப்பு கொடிகளுடன் திரண்டனர். இந்தப் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்தது மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் நடத்த தடை விதித்திருந்தது. ஆயினும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்றது.
நாகேஸ்வர ராவ் பூங்கா முன்பு கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள் முன்னிலையில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, சிறிலங்க அதிபர் ராஜபக்சவையும், அவருக்கு வரவேற்பு அளிக்கும் டெல்லி அரசையும் கண்டித்து முழங்கங்கள் எழுப்ப, அதனைத் தொண்டர்களும் முழங்கினர்.
தமிழினப் படுகொலை செய்த ராஜபக்ச திரும்புப் போ., வரவேற்காதே வரவேற்காதே தமிழினப் படுகொலை செய்த ராஜபக்சவை டெல்லி அரசே வரவேற்காதே. தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அப்போது ராஜபக்சவின் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது.
இதன் பிறகு தலைவர்கள் உரையாற்றினார்கள். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்தப் பிறகு, தமிழர்களின் நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்று கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியதைச் சுட்டிக்காட்டி பழ.நெடுமாறன், உண்மையிலேயே தமிழர்கள் நலனில் அக்கறை இருந்தால் டெல்லிக்குச் சென்று, தமிழர் மறுவாழ்விற்கு எடுக்கப்பட வேண்டிய உறுதியான நடவடிக்கைகள் குறித்து பேசியிருக்க வேண்டும் என்று கூறினார்.
சிறுவனை கடத்தி கப்பம் பெற்ற டக்ளஸை கைது செய்யவேண்டும்.
போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு, சென்னை சூளை மேட்டில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரைக் கொன்றும், மேலும் 4 பேரைக் காயப்படுத்திய குற்ற வழக்கிலும், ஈழத்தைச் சேர்ந்த குடும்பத்தின் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய வழக்கிலும் முக்கிய குற்றவாளியான சிறிங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ராஜபக்சவுடன் டெல்லி வருகிறார் என்பதை சுட்டிக்காட்டி, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பேசிய வைகோ, ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ராஜபக்சவும், டெல்லி அரசும் பதில் கூறியே தீர வேண்டும் என்றும், அதுவரை தமிழர்களின போராட்டம் ஒயாது என்றும் கூறினார்.
இந்தப் போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன், இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி. இராசேந்தர், தமிழரசி நாளிதழ் ஆசிரியர் நடராசன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொணடனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு தலைவர்களையும், நூற்றுக்கணக்கான தொண்டர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
சீமானுடன் 200க்கும் மேற்பட்டோர் கைது
சென்னை நுங்கம்பாக்கதிலுள்ள சாஸ்திரி பவன் முன்பு கருப்புக் கொடிகளுடன் மறியல் நடத்தச் சென்ற நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானும், அவருடன் 200க்கும் அதிகமான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட பல ஆயிரக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 comments :
சில நாட்கள் அரச செலவில் சாப்பிட பலருக்கு இந்த சீமான், நெடுமாறன் கோஷ்டிகள் உதவுகிறார்கள். தமிழ் நாட்டில் இலவச உணவுத் திட்டம் முதியோருக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment