Friday, June 25, 2010

தமிழ் அகதிகள் புகலிட விவகாரம் கடும்போக்கை கைவிடுகிறார் புதிய பிரதமர்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புகலிடம் வழங்கும் விடயத்தில் ஆஸ்திரேலியாவின் கடும் போக்கை புதிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தளர்த்துவார் என்று தெரிய வருகிறது. இலங்கை அகதிகள் ஏராளமானோர் வருடாவருடம் கடல்வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வருகின்றார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் அகதி அந்தஸ்து பெற அருகதை உடையவர்கள் ஆவர். ஆனால் இவருக்குமுன் பிரதமராக இருந்த கெவின் ரூட் தலைமையிலான இலங்கைத் தமிழ் அகதிகள் விவகாரத்தில் கடும்போக்கை கடைப்பிடித்து வந்திருக்கிறது. இதனால் இவருக்கும் இவருடைய ஆஸ்திரேலிய மக்களிடையேயான செல்வாக்குக் குறைய நேர்ந்தது. அத்துடன் எதிர்க்கட்சிகள் இவரின் இக்கடும்போக்கை கடுமையாக விமர்சித்து வந்தன. சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களும் இவரைக் கடுமையாக சாடியிருந்தன.

இவரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இலங்கை அகதிகளுக்கு விசா வழங்குகின்றமைக்கான முன்னெடுப்புக்கள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் இக்கடும்போக்கை தளர்த்துவார் என்று ஆஸியில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் அவரிடம் இருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளியாகி உள்ளன.

அவர் பிரதமராகப் பதவியேற்று சில மணித்தியாலங்களில் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் அகதிகள் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறி உள்ளார். அவர் இலங்கை விவகாரத்தை எடுத்துக் கொண்டார். இலங்கை விவகாரத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கிறன என்று அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment