பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கும் தலிபான்களுக்குமிடையில் நேரடித் தொடர்பு
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதற்கான பலமான ஆதாரங்கள் இருப்பதாக புதிய தகவலொன்று தெரிவிக்கின்றது. முன்னர் நினைத்ததை விடவும் பாரியளவில் நிதியுதவி பயிற்சி மற்றும் புகலிடம் போன்றவற்றை ஐ.எஸ்.ஐ. தலிபான்களுக்கு வழங்கி வருவதாக இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
லண்டனின் பொருளாதார கல்வி நிறுவனமொன்றினால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையை தமது நாட்டிற்கு எதிராக விரோதப்போக்குடன் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் ஒன்றென பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.
இவ்வருட முற்பகுதியில் ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்களின் 9 களமுனைத் தளபதிகள் வழங்கிய தகவலின் பிரகாரம் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் தலிபான்களுடனான பாகிஸ்தானின் உறவு முன்பு நினைத்ததிலிருந்ததைவிட ஆழமானதாகவுள்ளது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக இவ்வறிக்கையைத் தயாரித்த குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தலிபான்களின் உயர்மட்டத் தலைவர்களின் சந்திப்பில் ஐ.எஸ்.ஐ. பங்குபற்றி வருவதாகத் தெரிவிக்கும் இவ்வறிக்கை தலிபான்களுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஆப்கானில் இந்தியாவின் செல்வாக்கைச் சீர்குலைக்க ஐ.எஸ்.ஐ. முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன்,பாகிஸ்தானின் அணுகுமுறையில் முக்கியத்துவமான மாற்றம் எதுவுமின்றி ஆப்கான் அரசும் சர்வதேச சமூகமும் ஆப்கானில் போராளிகளின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது சாத்தியமற்றதெனவும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வறிக்கையை குப்பையென வர்ணித்துள்ள பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் தமது இராணுவத்திற்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் பிரசாரத்தின் ஓர் அங்கமென இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment