Monday, June 14, 2010

டக்கிளஸ் கைது விவகாரம். ஒருவாரத்தினுள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு.

இந்தியா சென்றிருந்த ஈபிடிபி அமைப்பின் தலைவரும் அமைச்சருமான டக்கிளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி எனவும் அவரைக் கைது செய்யவேண்டும் எனவும் தமிழக மக்கள் உரிமைக்கழகத்தினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றில் இடம்பெற்றது. மனுவினை விசாரித்த நீதிபதிகள் மத்திய மாநில அரசுகள் இது இவ்விடயம் தொடர்பான உருக்கமான பதிலொன்றை ஒருவார காலத்தினுள் அளிக்கவேண்டும் என அறிவித்து வழக்கினை எதிர்வரும் 21ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும், வழக்கறிஞருமான புகழேந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ''இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த இலங்கை பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, அலுவல் ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த வழக்கில் டக்ளஸ் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார்.

வெளியே வந்த பிறகு, 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கீழ்ப்பாக்கத்தில் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, ரூ. 7 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். 1989ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு வெளியே வந்தவர் இலங்கைக்கு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இப்போது டக்ளஸ் தேவானந்தா இந்தியா வந்துள்ளார். அவரை கைது செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com