ஜனாதிபதி மஹிந்தவுக்கு உக்ரேய்னில் செங்கம்பள வரவேற்பு
உக்ரேய்ன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சின் அழைப்பின் பேரில் நேற்று இங்கிருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் நேற்றிரவு 7.30 மணியளவில் (இலங்கை நேரப்படி) உக்ரேய்னின் கிவ் நகரிலுள்ள பொரிஸ்பல் விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
அங்கு அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரேய்ன் அரசாங்கத்தின் சார்பில் உக்ரேனிய வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் கொஸ்டயன்டின் கிரிஸ்சென்கோ மற்றும் கிவ் நகரின் பிரதிமேயர் அலெக்ஸாண்டர் பொபோல் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குழுவினரையும் வரவேற்றனர்.
உக்ரேய்னில் தங்கியிருக்கும் போது உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யனுகோவிச், பிரதமர் மைக்கோலா அஸாரோசி ஆகியோருடனும் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுடனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன் சுற்றுலா, போக்குவரத்து, கடற்படை, பாதுகாப்பு தொடர்பான முக்கிய உடன்படிக்கைகள் இந்த விஜய த்தின் போது இரு நாட்டு தலைவர் களினாலும் கைச்சாத்திடப்படவுள்ளன. அத்துடன் இலங்கை - உக்ரேனிய வர்த்தக மாநாட்டிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்குபற்றுவார். உக்ரேனிய பாராளுமன்றத்தை அவர் பார்வையிடுவதுடன் உக்ரேய்ன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர் விசேட சொற்பொழிவாற்றுவார்.
ஜனாதிபதியுடன் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் செயற்பாட்டு பிரிவின் பிரதான அதிகாரி காமினி செனரத் ஆகியோர் ஜனாதிபதியுடன் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்த முடியுமென அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். உக்ரேய்னைப் பொறுத்தவரை பரந்துபட்ட விஞ்ஞானம், விவசாயம், தொழில்நுட்பம், கைத்தொழில் துறைகளின் வளங்களைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நாடாகவும் விளங்குகிறது.
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கு மிடையிலும் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியிலும் பூகோள ரீதியாக முக்கியத்துவமிக்க உக்ரேய்ன், கடற் போக்குவரத்திற்காகவும் வாய்ப்பான நாடு என்பதுடன் வரலாற்று ரீதியாகவும், மூலோபாய முக்கியத்துவம்மிக்க முக்கிய நாடாகவும் விளங்கியுள்ளது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் சுதந்திர நாடான உக்ரேய்ன் தற்போது ஒற்றையாட்சி நாடாக விளங்குகிறது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை ஏற்றுமதி செய்வதில் பிரதான நாடாக விளங்கும் உக்ரேய்ன் சுற்றுலாத்துறையில் எட்டாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment