ஐ.நா விடயத்தில் சிந்தித்து செயற்படுவதே புத்திசாலித்தனமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நகர்வுகள் இலங்கை அரசாங்கத்தை படுதோல்வியடையச் செய்து விட்டன. காலம் கடந்து விட்ட விடயம் குறித்து கத்திக் கொண்டிருப்பதை விடுத்து அதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் சிந்தித்து செயற்படுவதே புத்திசாலித்தனமாகும்.
நிபுணர்கள் குழு விடயத்தில் தோற்றுப் போனதை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட ஆக வேண்டும் என்று ஜே.வி.பி. கடுமையாக விமர்சித்துள்ளது. நிபுணர்கள் குழு இலங்கைக்குள் நுழைவதற்கு விசா வழங்கப் போவதில்லை என்பது வாய்ச் சவடால் மட்டுமல்ல, மக்களை ஏமாற்றும் செயலுமாகும்.
ஏனெனில் குழுவை அமைத்துள்ள ஐ.நா.இலங்கைக்குள் பிரவேசிக்காமலேயே அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இயலுமை கொண்டுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான இலங்கையின் நிலைவரங்களை ஆராய்வதற்கென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் மூன்று நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் மேற்படி நிபுணர்கள் குழு இலங்கைக்கு வருவதையும் இங்கு விசாரணைகள் மேற்கொள்வதையும் அனுமதிக்க முடியாதென அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், யுத்தம் நிறைவடைந்து விட்ட நிலையிலும் அரசாங்கம் தனது நேர்மைத் தன்மையை மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை தனி மனித ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தவறி விட்டமையே ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு அமைக்கப்படுவதற்கு காரணமாகும்.
ஒரு வருட காலம் கடந்து விட்ட போதிலும் போரின் பாதிப்புகளுக்கு இலக்கான அப்பாவி மக்களின் நிலைமைகளை கவனிப்பதற்கோ அவர்களை வாழ வைப்பதற்கோ அரசாங்கம் தவறி விட்டது.
புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர். ஆனால் அந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கோ அல்லது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரஜைகளாக மாற்றுவதற்கோ அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் தொடர்பில் அரசு அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. மீள் குடியேற்றம் என்பது சர்வதேசத்துக்கு காட்டப்படுகின்ற நாடகமாகவே அமைந்துள்ளது. உண்மை நிலைவரங்கள் வெளியாக விடாது ஊடக அடக்கு முறைகளினூடாக மூடி மறைத்துக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் மோசமான பிரதிபலன்களையே தந்து கொண்டிருக்கின்றன.
அரசாங்கத்தின் தான்தோன்றித் தனமும் அதே நேரம் முறையற்றதும் கொள்கையற்றதுமான இராஜதந்திர உறவுகளுமே ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அமைக்கப்படுவதற்கான காரணமாக அமைந்தன என்று கூறுவதில் தவறுகள் கிடையாது.
அரசாங்கத்தின் நேர்மைத் தன்மை நல்லாட்சி ஒழுகப்பட்டிருந்தால் ஐக்கிய நாடுகள் இங்கு மூக்கை நுழைக்க வேண்டியிருந்திருக்காது. மேலும் குழு அமைக்கும் விடயம் இன்று நேற்று பேசப்பட்டதோ தீர்மானிக்கப்பட்டதோ அல்ல. இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென ஐ.நா. குழு அமைக்கவிருக்கும் விடயம் பல மாதங்களுக்குன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment