Monday, June 14, 2010

பாலியல் குற்றம்: சந்தேக நபர்கள் அடையாளம்

இலங்கையின் வடக்கே பெண்கள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச் சந்தேக நபர்கள் நான்கு பேர் அடையாளம் காணபபட்டுள்ளனர்.
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் கடந்த 6 ஆம் திகதி இந்த பாலியல் குற்றச் சம்பவம் நடந்திருந்தது.

இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக இவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சிகளின் முன்னால் நிறுத்தப்பட்டனர். அவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் தவிர ஏனைய இருவரையும் கிளிநொச்சி நீதவான் பெ.சிவகுமார் விடுதலை செய்துள்ளார்.

இந்த அடையாள அணிவகுப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் கொழும்பில் இருந்து சென்றிருந்த முக்கிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்கள்.

கொழும்பு, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் உள்ள பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தர்களும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர்.

கிளிநொச்சி நீதிமன்றத்திற்குச் சென்ற சட்டத்தரணிகள் குழுவில் இடம்பெற்றிருந்த மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் கருத்து தெரிவிக்கையில், "இந்த வழக்கில் பொலிசார் உடனடியாகச் செயற்பட்டு விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி குற்றச் செயலில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண உதவியிருக்கின்றார்கள். எனினும் கடந்த காலங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், வன்முறைகள், பாலியல் குற்றங்கள் தொடர்பில் பொலிசார் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை" என சுட்டிக்காட்டினார்.

"சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், எதிர்காலத்தில் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வைத்து வழக்தைத் தொடர்ந்து நடத்துவதில் சட்டமா அதிபர் காட்டும் மும்முரத்தை பொறுத்தே இந்த வழக்கில் நியாயம் கிடைக்குமா அல்லது கடந்த காலங்களைப்போல வழக்கு கிடப்பில் போடப்படுமா என்பது தெரியவரும்." என சட்டத்தரணி ரட்னவேல் தெரிவித்துள்ளார்.

Thanks BBC

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com