ஜனாதிபதியுடன் பேசத் தயார்-சம்பந்தர்
இனப்பிரச்சினை தீர்வுத் திட்டம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக உள்ளதாக அதன் நாடாளுமன்ற குழுவின் தலைவர் இரா சம்பந்தர் கூறுகிறார். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அவர்களுடன் தான் இது தொடர்பில் பேச்சு நடத்தியதகவும் அவர் கூறுகிறார்.
பேராசிரியர் பீரிஸுடனான சந்திப்பின் போது, அரசியல் தீர்வு தொடர்பாகவும் ஒரு ஆரம்ப முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது எனவும் சம்பந்தர் தெரிவிக்கிறார். இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது என்றாலும், இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை அவரை சந்திப்பதற்கான அழைப்பு அரச தரப்பிலிருந்து வெளிவரவில்லை என்றும் சம்பந்தர் கூறுகிறார்.
இலங்கை வெளியுறவு அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில், தற்போது தகவல்களை வெளியிடுவது பொருத்தமாக இருக்காது என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் மூலமாக ஏற்படுகின்ற ஒரு தீர்வு என்ன விதமாக அமையலாம் என்பது பற்றி அந்தக் கூட்டத்தில் ஒரு ஆரம்ப பரிசீலனை செய்யப்பட்டதாக மட்டுமே தற்போது கூற இயலும் என்றும் சம்பந்தர் கூறுகிறார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை காணும் நோக்கில், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதை நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தாங்கள் தெரிவித்திருந்ததை இரா சம்பந்தர் சுட்டிக்காட்டுகிறார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது பிரேரணைகளை இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு முன்னர் அவரிடம் விவாதிக்க வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது என்று வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை என்றும் சம்பந்தர் கூறுகிறார்.
எனினும் பல விடயங்கள் தொடர்பில் தமது தரப்பு இந்தியாவுடன் பேசி வருவதாகவும் அவர் கூறுகிறார். இலங்கை ஜனாதிபதி இம்மாதம் 8 ஆம் தேதி புதுடில்லியில் இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks BBC
0 comments :
Post a Comment