ஜப்பான் பிரதமர் ராஜினாமா அமெரிக்க இராணுவத் தளத்தை அகற்றும் விவகாரம் பின்னணி.
கட்சித் தலைமையின் உத்தரவை ஏற்று ஜப்பான் பிரதமர் யூகியோ கடோயாமா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஜப்பானின் ஒகினாவா தீவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை அகற்றும் விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என யூகியோ கடோயாமா மீது விமர்சனம் எழுந்தது. மேலும் அவர் மீது நிதி முறைகேடு குற்றச்சாற்றும் கூறப்பட்டது,
இதை தொடர்ந்து நடந்த கருத்து கணிப்பில், மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கு 20 விழுக்காடாக குறைந்து விட்டது தெரிய வந்தது. இந்நிலையில், வருகிற ஜுலை மாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவை தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் போட்டியிட இருக்கும் அவரது கட்சி உறுப்பினர்கள், கடோயாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளதால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர்.
இதனையடுத்து அவரை பதவி விலகும்படி ஆளும் ஜப்பான் ஜனநாயக கட்சி அவருக்கு உத்தரவிட்டது. அதனை ஏற்று யூகியோ கடோயாமா இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை கட்சியின் பொதுச் செயலாளர் ஓஸாவா ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment