செம்மொழி மாநாட்டிற்கு இலங்கைநெற் இன் வாழ்த்துக்கள்.
"தமிழுக்கு அமுதென்று பேர் – அந்த
தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு மேல்"
உயிருக்கு மேலான – உன்னதமான
உலகாழும் தமிழே !
உன்னை இன்னும் உயர்த்தி வைக்க
உயர்ந்தவர்கள் - தமிழ்
உணர்வு கொண்ட உத்தமர்கள்
உருவாக்கும் செம்மொழி மாநாடு
உலகெங்கும் செவிகொண்டு
உறங்காத கண்கொண்டு – உன்
உயர்வான நிலைகண்டு – நாம்
உற்சாகம் பெறவென்று
உயிர் கொண்டு பிறந்தோமோ?
உலகில் தமிழரென்று தலைநிமிர்ந்து நடவோமோ?
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய தமிழே! யாதும் ஊரே யாவரும் கேளீர் என ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் உலகக்கவி படித்த உயர் மொழியே! பல வடிவில் கிளைபரப்பி மனிதத்தை மாசற்ற காற்று சுவாசிக்க வைக்கும் இனிய தமிழ் தென்றலே!
"இருந்தமிழே உன்னால் இருந்தேன் - இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" என்று தமிழ் விடு தூது சொல்ல .. தமிழின் இனிமை , பொருள்செறிவு , கம்பீரம் , ஒழுக்கம் , சுவை , ஒளி , குளிர்ந்தநடை இவற்றிற்கு கம்பனது இராமகதையும் , உலகளாவிய பொது நெறி முறைகளுக்கு திருக்குறளும் அணியாக இருக்க .. தமிழ் புகழ் சொல்லும் பல நூல்கள் , பல அறிஞர்கள் உலகெங்கும் உலாவர .. இன்னும் தமிழ் மொழியின் சிறப்பை என்னவென்று நாம் சொல்ல?
வாழிய தமிழ்! வாழிய தமிழ் வளர்க்கும் நெஞ்சங்கள்!!
49 க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான பேரறிஞர்களும் , இந்திய மண்ணிலிருந்து ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழறிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இதையிட்டு பெருமிதமும் மகிழ்ச்சியும் அடையும் நாம், இம்மாநாட்டை ஏற்பாடு செய்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கட்கும் மாநாட்டை நாடாத்திக்கொண்டிருக்கும் பெரியோர்கள் , அறிஞர்கள் அனைவருக்கும் இம்மாநாடு சிறப்புற இனிய வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிப்பதில் இலங்கைநெற் இன்புறுகின்றது.
இலங்கைநெற் ஆசிரியர் குழு.
0 comments :
Post a Comment