Monday, June 21, 2010

திருச்சியில் புலிகள் மூவர் கைது வெடிபொருட்கள் பறிமுதல், தமிழக காவற்துறையினர்.

தமிழகத்தின் திருச்சியில் புலிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.புலிகள் இயக்கத்தின் உளவுபிரிவின் தமிழகத்தின் தலைவராக செயல்பட்டவர் எனக்கூறப்படும் சிரஞ்சீவி என்ற ராஜு (வயது 38) என்வர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் சிரஞ்சீவி மாஸ்டர் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

வெடிகுண்டு தயாரிக்க தேவைபடும் அமோனியம் நைட்ரேட் என்ற பொருளை ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய வழக்கில் கடந்த 2007‐ம் ஆண்டு இவர் காவற்துஐறயினரால் தேடப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து இலங்கைக்கு தப்பி சென்ற அவர் 2008‐ம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு சென்று கண்ணி வெடி தயாரிப்புக்கு தேவைபட்ட உலோக உருளை பொருட்களையும் கடத்தியதாக இவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து உளவு தகவல்களை சேகரித்து இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் அனுப்பி வந்ததுடன் அவ்வப்போது இலங்கைக்கு சென்றுவிட்டு தமிழகத்திற்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான இறுதிக்கட்ட போருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் சிரஞ்சீவி மாஸ்டர் தமிழகம் வந்து காஞ்சீபுரத்தில் இரகசியமாக தங்கியிருந்தார். அவரை கடந்த வியாழக்கிழமை தமிழக உளவுப்பிரிவான கியூப் பிரிவு காவற்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். வழக்கமாக கள்ளத் தோணியில் தமிழகம் செல்லும் சிரஞ்சீவி மாஸ்டர் இந்த முறை கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னை சென்றுள்ளார். அவர் கடவூச்சீட்டு மற்றும் விசா வைத்துள்ளார். அவர் வைத்துள்ள கடவூச்சீட்டு மற்றும் விசா உண்மையானதா என கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் சிரஞ்சீவி மாஸ்டரிடம் நடத்திய விசாரணையில் திருச்சியிலும் விடுதலைப்புலிகள் சிலர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையொட்டி திருச்சியில் கியூப் பிரிவு காவற்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தி 3 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக தமிழக சட்டம்‐ஒழுங்குப் பிரிவின் காவற்துறை ஆணையாளர் லத்திகாசரண் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.


சிரஞ்சீவி மாஸ்டர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.புலிகளின் உளவுப் பிரிவை சேர்ந்த சிவா என்பவர் சென்னைக்கு அகதியாக வந்து தங்கியுள்ளார். இவர் தனது வருகை பற்றி காவற்துறையில் பதிவு செய்யவில்லை. ஈரோட்டில் தங்கியிருந்த புலி இயக்கத்தை சேர்ந்த செல்வம் மற்றும் திருச்சியில் வசித்த விடுதலைப்புலி உறுப்பினரான தமிழ் ஆகியோருடன் சேர்ந்து, இலங்கையில் போர் நடந்தபோது, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக சிவா வெடி பொருட்கள் கடத்தியுள்ளார்.

போரில் புலிகள் தோல்வியடைந்த பின்னர் இலங்கை இராணுவத்திற்கு எதிராக போரிடுவதற்காக வெடி பொருட்களை கடத்திச் செல்லவும் இவர்கள் தற்போது திட்டமிட்டுள்ளனர். இதுபற்றிய தகவல் கிடைத்த உடன் கியூப் பிரிவு காவற்துறையினர் திருச்சியில் அதிரடி சோதனை நடத்தி சிவா, தமிழ், செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடிகுண்டுகள் செய்ய பயன்படும் 4 ஆயிரத்து 900 சாதாரண டெட்டனேட்டர்கள் மற்றும் 430 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் நாச வேலைகள் எதுவும் செய்ய திட்டமிடவில்லை என்பதும், இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காகவே மேற்படி வெடி பொருட்களை சிறிது, சிறிதாக வாங்கி பதுக்கி வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தமிழக கடலோர பாதுகாப்பு தீவிரமாக இருந்ததால், இந்த பொருட்களை இலங்கைக்கு கடத்த முடியவில்லை எனவும் இதனால் திருச்சியிலேயே பதுக்கி வைத்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ரெயில் தண்டவாள தகர்ப்பு சம்பவத்திற்கும், இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. கைதான 3 பேரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தமிழக சட்டம்‐ஒழுங்குப் பிரிவின் காவற்துறை ஆணையாளர் லத்திகாசரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com