Monday, June 14, 2010

சிங்களத் தரப்பின் அரசியல் விருப்பமே இப்போது தேவை,

தமிழ் மக்களின் துன்பங்களுக்கு முன்னேற்றகரமான அதிகாரப் பகிர்வு கட்டமைப்புக்குள் திருப்திகரமான தீர்வைக் காணுமாறு இலங்கையின் தலைமைத்துவத்தை இந்தியா தொடர்ந்து ஊக்குவிக்கவேண்டும் என்று சென்னையிலிருந்து வெளிவரும் பிரபல இந்திய ஆங்கில நாளேடான இந்து வலியுறுத்தியுள்ளது.

ஆக்கபூர்வமான விஜயம் என்று மகுடமிட்டு இந்து சனிக்கிழமை ஆசிரிய தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விஜயமானது இந்தியாவுடனான நெருக்கமான பிணைப்புகளை மீள உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இருதரப்பு உறவையும் புதிய மட்டத்திற்குக் கொண்டுசெல்வதற்கு இருதரப்பினரும் தயாராக இருப்பது தொடர்பான சமிக்ஞையை விடுப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தன்மை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இருதரப்பு ஒத்துழைப்பையும் விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்குமான உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உள்நாட்டில் இன மோதலின் சுமைகள் இல்லாமல் வருகை தந்த இலங்கையின் அரச தலைவருக்கு புதுடில்லி வரவேற்பளிப்பது கால் நூற்றாண்டில் இதுவே முதற்தடவையாகும். ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் ராஜபக்ஷ ஈட்டிய பெரு வெற்றியின் மூலம் அவர் தன்வசம் வைத்திருக்கும் அரசியல் கையிருப்பானது பிராந்தியத்திலுள்ள தலைவர்கள் மத்தியில் ஒப்பிடமுடியாத ஒன்றாகும். உள்நாட்டு யுத்த அழிவுக்காக தனது அரசாங்கத்திற்கு ஆதரவு கோரியோ அல்லது உதவியை நாடியோ அவர் வந்திருக்கவில்லை. 3 தசாப்தங்களாக தமிழர் பிரச்சினையும் இலங்கையில் தொடர்ந்து ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அதனைக் கையாண்ட வழிமுறையும் இரு அயலவர்களினதும் பிணைப்புகளில் மேலாதிக்கம் செலுத்திவந்தது புலிகள் இராணுவ ரீதியில் இல்லாமல் செய்யப்பட்டதும் இருதரப்பு உறவையும் மீள வடிவமைப்பது தொடர்பாக இலங்கைத் தலைவர் தெளிவான விருப்பத்தைக் கொண்டிருக்கிறார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலதிக தூரத்திற்குச் செல்வதற்கு ஆயத்தமாக இருப்பதற்கு சான்றாக அம்பாந்தோட்டையில் இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை திறப்பதற்கு இணக்கம் தெரிவித்தமை காணப்படுகிறது. அம்பாந்தோட்டையில் நவீன துறைமுகத்தை நிர்மாணிப்பதில் சீனா உதவியளித்து வருகிறது. இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணத்தில் இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை அமைப்பதற்கும் ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கையுடனான தனது உறவுகளைக் கட்டியெழுப்ப இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இதன் அடிப்படையில் உடனடி விவகாரமாக இருப்பது இடம்பெயர்ந்த தமிழர்களை மீளக்குடியேற்றும் விடயமாகும். மனிதாபிமான நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கு 500 கோடி ரூபாவை வழங்கியதற்கு மேலதிகமாக இலங்கையின் வட பகுதி செயல்திட்டங்களுக்கு இந்தியா உதவிவருகிறது.

50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் புதுடில்லியின் தீர்மானமானது காலத்திற்கு உகந்த முன்முயற்சியாகும். ஆனால், சிறந்த அயலவரான இந்தியாவானது பாரிய அளவிலும் மிகவும் குறிப்பிடத்தக்க தரத்தினைக் கொண்டதுமான பங்களிப்பை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கின் அபிவிருத்திக்கும் தமிழர்களின் புனர்வாழ்வு மீள்நிர்மாண முயற்சிக்கும் வழங்க வேண்டியது அவசியமானதாகும்.

நியாயமான முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் துயரங்களுக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷவால் அளிக்கப்பட்டிருக்கும் உறுதிமொழிகள் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்காணப்படப்போகின்றது என்பது பற்றிய வேறுபாடுகள் கூட்டறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றமை ஆச்சரியமானதல்ல.

13 ஆவது திருத்தத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வை புதுடில்லி எதிர்பார்க்கிறது. அத்துடன் இறுதியான தீர்வுக்குத் தேவையான நிபந்தனைகளை உருவாக்குவது அவசியம் என்ற எதிர்பார்ப்பும் புதுடில்லியிடம் காணப்படுகிறது. மறுவார்த்தையில் சொல்வதானால் 13 ஆவது திருத்தமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டதாக அமுலாக்கப்பட வேண்டுமென்பது புதுடில்லியின் எதிர்பார்ப்பாகக் காணப்படுகிறது. மறுபுறத்தில் ராஜபக்ஷவின் உறுதியான தீர்மானமானது சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் இணக்கப்பாட்டைக் காண்பதென்பதாகும். அதற்குத் தேவையான நிபந்தனைகளை உருவாக்க வேண்டுமென்பதும் இலங்கை மக்கள் யாவரும் சமாதானமான, நீதியான, கௌரவமான சூழலில் தமது வாழ்வை முன்னெடுக்க வேண்டும். மற்றும் ஜனநாயகம், பன்முகத்தன்மை, சமவாய்ப்பு, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்குரிய அரசியலமைப்பின் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பாக தனது தீர்மானத்தை ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருக்கிறார். சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் விரிவான பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பான டாக்டர் மன்மோகன் சிங்கின் சிந்தனைகளை ராஜபக்ஷவும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு முதலாவதாகத் தேவைப்படுவது சிங்களத் தரப்பின் அரசியல் விருப்பமாகும். நியாயமானதும் நீடித்ததுமான தீர்வைக் காண்பதற்கு சிங்களத்தரப்பின் அரசியல் விருப்பம் தேவைப்படுகிறது. அத்துடன், தமிழ்க் கட்சிகளின் பொறுப்பும் இதன் ஓர் அங்கமாகக் காணப்படுகிறது. எத்தகைய விதமான அதிகாரப் பகிர்வு, அபிவிருத்தி மற்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமது மக்களுக்கு எத்தகைய எதிர்காலத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்பது தொடர்பாக தமிழ்க் கட்சிகள் தமது மனங்களைத் துரிதமாகத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். தமக்கிடையிலான வேறுபாடுகளை அவர்கள் வெற்றிகொள்வது அவசியமாகும். பிரபாகரனின் சகாப்தத்தில் கொண்டிருந்த பிரிவினைவாத மனப்பாங்கிலிருந்தும் அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும். அந்த மனப்பாங்கானது மிதவாதிகள் என்று அழைக்கப்படுவோரைக் கூட ஆட்சியிலிருந்த இலங்கை அரசாங்கங்களுடன் செயற்படுத்தக் கூடிய யோசனைகளை பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க முடியாமல் தடுக்கப்பட்டிருந்தது. இலங்கைத் தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள், கல்வி கற்றவர்கள், புத்திசாதுரியம் நிறைந்தவர்கள் மற்றும் பல்வேறு திறமைகளுடன் துரிதமாக மீண்டெழுந்து வருபவர்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ்க் கட்சிகள் முன்னோக்கி நகர்வை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது ஏற்புடையதாக இருக்கும் சமூக, பொருளாதார சூழல், தாராளமான அபிவிருத்தி, உதவி, சமாதானம், ஸ்திரத்தன்மை, கண்ணியமான சுயநிர்வாக வாய்ப்புகள் என்பவற்றின் மூலம் ஐக்கியப்பட்ட தேசத்தின் பகுதியாக தங்களை தாங்கள் வடிவமைத்துக்கொள்வதற்கான பிரகாசமான எதிர்காலம் காணப்படுகிறது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவானது உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சாதகமான நடவடிக்கையாகும். ஆழமான முறையில் ஏற்பட்டிருக்கும் இனப்பிளவை சீர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார். இந்த ஆணைக்குழுவில் சிங்கள, தமிழ் சமூகங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற 8 பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். 2002 பெப்ரவரி, 2009 மே க்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக இந்த ஆணைக்குழு ஆராயவுள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீள ஏற்படாததை உறுதிப்படுத்துவதற்கான சிபாரிசுகளை இந்த ஆணைக்குழு பரிந்துரை செய்யவுள்ளது. இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட காலம் மற்றும் யுத்தத்தின் இறுதி நாட்களின் போது இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் விடயங்களை விசாரிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லாதிருப்பது போன்ற விடயங்கள் குறித்து சில ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஆணைக்குழுவானது சிறுபான்மை, பெரும்பான்மை சமூகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது. கடந்த காலத்தை இச்சமூகங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சௌஜன்யத்துடன் வாழ்வதற்கு முன்னோக்கி நகர முடியும். தென்னாபிரிக்காவின் உண்மை, நல்லிணக்கக் குழுவைத் தனது முன்மாதிரியாக இலங்கை எடுத்துக்கொண்டுள்ளது. அது சிறப்பான முன்மாதிரியாக இல்லாவிடினும் நிறவெறி அத்தியாயத்தை அந்த நாடு முடிவுக்குக் கொண்டுவந்து முன்னேற்றமடைய உண்மை, நல்லிணக்கக் குழு உதவியாக அமைந்தது. இலங்கையில் பல வருடங்களாகத் தொடர்ந்த யுத்தமானது இரு சமூகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த ஆணைக்குழுவால் ஆற்றுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிச்சயமாக உதவ முடியும்.

1991 இலிருந்து புதுடில்லியிலிருந்த அரசாங்கங்கள் ஆக்கபூர்வமான முறையில் இலங்கை தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்திவருகின்றன. சாத்தியமானவற்றைக் கண்டறிந்து இருதரப்பு உறவை புதிய மட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான காலம் வந்திருக்கிறது. இதன் ஓர் அங்கமாக தன்னைத்தானே பலவந்தமாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் தமிழ் மக்களின் துயரங்களுக்கு முன்னேற்றகரமான அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்புக்குள் திருப்தியான தீர்வைக் காணுமாறு இலங்கையின் தலைமைத்துவத்திற்கு இந்தியா தொடர்ந்து ஊக்கவிப்பை அளிக்கவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com