Tuesday, June 1, 2010

இலங்கையில் விசாரணை ஆணையம் நம்பிக்கை அளிக்கிறது: ஹில்லாரி கிளிண்டன்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமனம் செய்துள்ள 8 பேர் கொண்ட விசாரணை ஆணையம் நம்பிக்கை அளிக்கிறது என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரீஸ், வாஷிங்டனில் நேற்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஹில்லாரி இவ்வாறு கூறியுள்ளார்.

'ஜனாதிபதி அமைத்துள்ள அந்த ஆணையம் (போர்க் குற்றம் குறித்து விசாரிக்கும்) என்ற நம்பிக்கை அளிக்கிறது. அது அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறோம். விசாரணை ஆணையத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நோக்கின்படி அது மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையாக விசாரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்' என்று ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

போர்க் குற்றம் ஏதும் நடக்கவில்லை: பீரிஸ்


இலங்கைப் போரின் இறுதிகட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாவும், மிகப் பெரிய அளவில் போர்க் குற்றமும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுவதை இலங்கை வெளிவிககார அமைச்சர் பீரிஸ் மறுத்துள்ளார்.

போர்க் குற்றம் நடந்துள்ளது என்றும், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் சர்வதேச சிக்கல் தீர்ப்புக் குழுவும், மனித உரிமை கண்காணிப்பகமும், சர்வதேச பொது மன்னிப்புச் சபையும் கூறும் குற்றச்சாற்றுகளை மறுப்பதாகக் கூறியுள்ள பீரிஸ், அவர்கள் கூறும் குற்றச்சாற்றுகளுக்கு ஆதாரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

'ஐ.நா.வின் அமைப்புகள் மூலம் சாதிக்க முடியாததை இவர்கள் வேறு வழிகளில் சாதிக்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் கூறும் குற்றச்சாற்றுகளை நிரூபிக்க வேண்டுமெனில் இவர்கள் ஐ.நா. பாதுகாப்பு பேரவை வாயிலாகவோ அல்லது பொது அவையிலோ அப்பிரச்சனையை கொண்டு சென்று தீர்வு காணட்டுமே' எனவும் சவால் விடுத்துள்ளார்.

'இறுதி கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச சிக்கல் தீர்விக் குழு (ஐவெநசயெவழையெட ஊசளைளை புசழரி - ஐஊபு) கூறுகிறது, ஆனால் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை. இங்குதான் அவர்கள் குத்துவாளை மறைத்து வைத்திருக்கிறார்கள்' என்றும் பீரிஸ் குற்றம் சாற்றியுள்ளார்.

பீரிஸின் குற்றச்சாற்றிற்கு பதிலடி கொடுத்துள்ள சர்வதேச சிக்கல் தீர்வுக் குழு, 'நாங்கள் ஆதாரங்களை பொதுவில் வெளியிட்டால் அதனை சிறிலங்க அரசு காணடித்துவிடும். அதனை அது நீண்ட காலமாகச் செய்து வருகிறது' என்று அதன் ஆசிய நடவடிக்கைக் குழுத் தலைவர் பாப் டெம்பிளர் கூறியுள்ளார்.

இறுதி கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல், படுகொலைகள் தொடர்பாக 200க்கும் அதிகமான படங்களை மனித உரிமை கண்காணிப்பகம் வைத்துள்ளது. அதில் புலிகள் செய்த மீறல்கள் தொடர்பான சில புகைப்படங்களைத் தவிர, மற்ற அனைத்தும் சிறிலங்க அரசப் படைகள் நிகழ்த்திய குற்றங்கள் தொடர்பானவையாகும் என்று அந்த அமைப்பின் ஆசிய துணை இயக்குனர் எலைன் பியர்சன் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com