Thursday, June 3, 2010

9வது ஆவது ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அமைசர் பீரிஸ் தலைமையில் இலங்கைக்குழு.

பாதுகாப்பு தந்திரோபாய ஆய்வுக்கான சர்வதேச நிறுவகத்தின் ஒன்பதாவது ஆசிய பாதுகாப்பு உச்சிமாநாடு நாளை சிங்கப்பூர், சங்கிரி-லா ஹொட்டலில் ஆரம்பமாகவுள்ளது. சங்கிரி-லா பேச்சுவார்த்தை என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவொன்று நாளை சிங்கப்பூர் பயணமாகவுள்ளது. இக்குழுவில் விமானப் படைத்தளபதி எயார் மாஷல் றொஷான் குணத்திலக, இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா ஆகியோருடன் பல சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசியா மற்றும் பசுபிக் வலையங்களைச் சேர்ந்த 28 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

நடைமுறைச் சாத்தியமான பாதுகாப்புக்கான ஒத்துழைப்புக்களை வளர்த்தல், நம்பிக்கையினைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்ட கலந்துரையாடல்களில், ஆசிய - பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் ஈடுபடக்கூடிய வகையிலான ஒரு மன்றத்தின் தேவைக்கேற்ப இந்த சங்க்ரி - லா பேச்சுவார்த்தை 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

அந்தவகையில் இவ்வருடம் இடம்பெறவுள்ள ஒன்பதாவது உச்சிமாநாட்டின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான மோதலின் இலங்கை பெற்ற வெற்றி, அந்த அனுபவங்கள் மற்றும் வெற்றியின் பின்னரான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் விளக்கமளிக்கப்படவுள்ளன.

அத்துடன் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள அவுஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துரயாடவுள்ளதுடன், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர், கல்வி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அந்நாட்டு சட்டமா அதிபர் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பாதுகாப்பு தந்திரோபாய ஆய்வுக்கான சர்வதேச நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சிமாநாட்டில் லண்டன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், புரூனை, கம்போடியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மன், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், லாவோஸ், மலேசியா, மொங்கோலியா, பர்மா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கொரியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்கள் ,பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com