இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து.
தமிழர் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வு, முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீள்குடியமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ராஜபக்சவுடன், பிரதமர் மன்மோகன் சிங் விவாதித்த நிலையில், இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.
இலங்கை அதிபராக கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக நான்கு நாள் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்தார் ராஜபக்ச.அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜபக்ச, இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
அப்போது இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீள்குடியமர்த்துவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அவருடன் விவாதித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியா - இலங்கை இடையே உயர்மட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரிடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராஜபக்ச ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்துவது, இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை விரைவாக மீள் குடியமர்த்தல், மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு,தமிழ் குழுக்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டது.
மேலும் வர்த்தக மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது எரிசக்தி பாதுகாப்பை உறுதிபடுத்துவது மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்பட இருதரப்பு மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.
அப்போது இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை விரைவில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்த ராஜபக்ச, அது தொடர்பான தமது அரசின் திட்டங்களையும் எடுத்துரைத்ததோடு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா அளித்த உதவியை பாராட்டினார்.
மேலும் போரினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களுக்கும் கவுரவத்துடன் கூடிய வாழ்வாதரத்தை உறுதிபடுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கருத்துக்கு தாம் உடன்படுவதாகவும் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இலங்கையின் எரிசக்தி தேவைக்கு உதவும் மின் திட்டங்கள் மற்றும் தலைமன்னார் - மது இடையே ரயில் பாதை அமைக்கும் பணிகளை இந்தியா மேற்கொள்வது உள்பட இருநாடுகளுக்கும் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நன்றி வெப்துனியா
0 comments :
Post a Comment