Monday, June 28, 2010

அமெரிக்க தீவிரவாதிகள் பட்டியலில் 6 வயது இந்திய சிறுமி.

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் 6 வயது மகளை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா . அந்தச் சிறுமி விமானங்களில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓகியோ மாகாணம் வெஸ்ட்லேக் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் சந்தோஷ் தாமசின் மகள் அலிஷா (6). இவரது பெயரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (US Department of Homeland Security), அவர் விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது.

சமீபத்தில் க்ளீவ்லேண்டில் இருந்து மினியபோலிஸ் நகருக்கு விமானத்தில் செல்ல டிக்கெட் பு்க் செய்ய முயன்றபோது, ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் இந்தத் தகவலை சந்தோஷிடம் தெரிவித்தார். இருப்பினும் விமானத்தில் பயணிக்க அனுமதி அளித்த விமான நிலைய அதிகாரிகள், இது குறித்து உள்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் பேசி, சிறுமியின் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து பாதுகாப்புத்துறைக்கு டாக்டர் சந்தோஷ் கடிதம் எழுதினார். ஆனால், அவர்களிடமிருந்து வந்த பதில் அதிர்ச்சியைத் தந்தது. சிறுமியின் பெயருக்கு அனுப்பப்பட்ட அந்த பதிலில், உங்களது கோப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரத்தை பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி கையில் எடுத்தது. இது குறித்து விமானப் பாதுகாப்பு துறையிடம் அந்தத் தொலைக்காட்சி கேள்வி எழுப்பியபோது,

''அப்படிப்பட்ட பட்டியல் இருப்பதும், அவர்களை விமானத்தில் பயணிக்காமல் தடுப்பதும் உண்மை தான். ஆனால், அதில் யாருடைய பெயர்கள் உள்ளன என்பது ரகசியம். மேலும் அந்தப் பட்டியலில் உள்ள நபர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்பதால் அது குறித்து யாருக்கும் எந்த விளக்கமும் தரப்படாது'' என்று பதில் கிடைத்துள்ளது.

இத்தனைக்கும் அலிஷா பிறந்து 2 மாதத்தில் இருந்து பலமுறை விமானப் பயணம் செய்துள்ளார். கடந்த பிப்ரவரியில் மெக்சிகோவுக்கும் குடும்பத்துடன் சென்று வந்துள்ளது இந்தக் குழந்தை. அப்போதெல்லாம் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. திடீரென இப்போது தான் அவரது பெயரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர் அதிகாரிகள்.

முன்பு வெளிநாட்டுப் பயணிகளி்ல் சந்தேகப்படும்படி உள்ளோரின் பெயர்களை இந்தப் பட்டியலில் சேர்த்து வந்தனர். இப்போது உள்நாட்டினரையும் அதில் சேர்க்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்த விவகாரத்தை நேரடியாக அமெரிக்க உள்துறையிடம் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் டாக்டர் சந்தோஷ் ஈடுபட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com