ஜெர்மனி: 2ம் உலகப் போர் குண்டு வெடித்து 3 பேர் பலி
ஜெர்மனியின் கோட்டிங்கன் நகரில் 2ம் உலகப் போர் காலத்து குண்டு திடீரென வெடித்துச் சிதறியதில் 3 பேர் பலியானர்கள். 6 பேர் படுகாயமடைந்தனர். மத்திய ஜெர்மனி நகரான கோட்டிங்கனில், 2ம் உலகப் போர் காலத்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை செயலிழக்கச் செய்ய முயற்சித்தபோது அது திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டு வெடித்த இடத்தில் 7 மீட்டர் அளவுக்கு ஆழமான பள்ளம் ஏற்பட்டு விட்டது. இந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மிகச் சிறந்த வெடிகுண்டு நிபுணர்கள் ஆவர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து 7000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கோட்டிங்கன் நகர ரயில் நிலையமும் சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டது. இரவில் அது மீண்டும் திறக்கப்பட்டது.
ஜெர்மனி அதிபர் கோஹ்லர் திடீர் ராஜினாமா:
ஜெர்மன் அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் (67), திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ரகசிய சுற்றுப் பயணம் செய்து, அங்குள்ள தனது நாட்டுப் படையினரை சந்தித்துவிட்டுத் திரும்பிய கோஹ்லர், ஆப்கானிஸ்தானில் ஜெர்மனியின் ராணுவ நடவடிக்கை குறித்து விமர்சித்து ஒரு பேட்டி தந்தார்.
மேலும் சோமாலியாவில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் சேர்ந்து கொண்டு, கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தி வரும் ஜெர்மன் கடற்படையின் செயல்களையும் விமர்சித்தார்.
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனி போன்ற நாடுகள், பிற நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும், அனாவசியமான மோதல் போக்கை தவிர்க்க வேண்டும்.
ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் நிலவும் ஸ்திரமற்ற உறவுகள் நமது வர்த்தகம், வேலைவாய்ப்பு, நாட்டின் வருவாய் உள்ளிட்டவற்றில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
அவர் எதை, யாரை குறை கூறுகிறார் என்பதை விளக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இந் நிலையில் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா குறித்து நிருபர்களிடம் ஹோர்ஸ்ட் கூறுகையில்,
ஆப்கானிஸ்தான் குறித்து நான் தெரிவித்த கருத்துகள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், எனக்கு இதுவரை ஆதரவளித்து வந்த மக்களுக்கு இந்த வேளையில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இந்த முடிவு குறித்து பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கும் தெரிவித்துவிட்டேன். ஜெர்மனி அதிபராக பதவி வகித்ததை எனக்குக் கிடைத்த மாபெரும் கெளரவமாக கருதுகிறேன் என்றார்.
ஜெர்மனியில் எந்த அரசியல் கட்சியையும் சாராத முதல் அதிபராக 2004ம் ஆண்டு கோஹ்லர் பதவியேற்றார். பொருளாதார நிபுணரான அவர், கடந்த ஆண்டு மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஜெர்மன் மக்களிடையே மிகவும் பிரபலமாக அதிபராக இவர் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment