ஜுன் 08ஆம் திகதி - உலக சமுத்திர தினம் World Oceans Day - புன்னியாமீன்
உலக சமுத்திர தினம் World Oceans Day ஆண்டு தோறும் ஜூன் மாதம் 08ஆம் திகதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. 1992 ஜுன் மாதம் 08ஆம் திகதி பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ Rio de Janerio நகரில் நடைபெற்ற “புவி மகாநாட்டின் போது” EARTH - SUMMIT சமுத்திரங்கள் மனித சமூகத்திற்கு வழங்கும் செல்வங்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் சமுத்திரதினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் 08ஆம் திகதியிலிருந்து உலக சமுத்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என 2008 டிசம்பர் 05ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை 63/iii ம் தீர்மானத்தின்படி முடிவெடுத்துள்ளது.
சமுத்திர விவகாரங்கள் மற்றும் சமுத்திர நீதிக்குப் பொறுப்பான திணைக்களம், செய்தித் திணைக்களத்துடன் இணைந்து இத்தினத்தில் பல நிகழ்ச்சிகளையும், செயற்பாடுகளையும் செய்து வருகின்றது. விழிப்புணர்வு நடவடிக்கையாக நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளன. உலகின் சமுத்திரங்களால் நாம் பெறும் பயனை அளவிடவும், அவை எமக்கு வழங்கும் (கடல்) உணவுகள், மீன்கள், செல்லப் பிராணிகள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களையும், அவற்றின் பயன்கள், பெறுமதிகள் பற்றி உயர் மதிப்புடன் நோக்கவும் இத்தினத்தை வருடாவருடம் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது
சமுத்திரம் என்பது கூடிய பரப்பைக்கொண்ட உப்பு நீர் நிலையாகும். இது நீர்க் கோளத்தின் முக்கியமான கூறாகும். ஏறத்தாழ 71% புவி மேற்பரப்பு (361 மில்லியன் சதுர கிலோமீட்டர்) தொடர்ச்சியாக அமைந்துள்ள சமுத்திரங்களினால் மூடப்பட்டுள்ளன. இவை பல சமுத்திரங்களாகவும், பல கடல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் பரப்பளவின் அரைப் பகுதிக்கு மேல் 3, 000 மீற்றருக்கு (9, 800 அடி) மேற்பட்ட ஆழத்தைக் கொண்டன. சராசரி உப்புத்தன்மை ஆயிரத்தில் 35 பகுதி (35%) ஆகும். பொதுவாக முழுக் கடல்நீரும் சராசரியாக ஆயிரத்துக்கு 30 - 38 பகுதிகள் உப்புத்தன்மை கொண்டது.
பொதுவாகப் புவி மேற்பரப்பிலுள்ள சமுத்திரங்கள் தனித்தனியானவை எனக் கொள்ளப்பட்டு வந்தாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகும். இவ்வாறு சமுத்திரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கட்டற்ற பரிமாற்றங்களைக் கொண்ட ஒரே உலகச் சமுத்திரம் என்னும் எண்ணக்கரு கடலியலில் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றது. முதன்மையான சமுத்திரங்களின், ஒரு பகுதி கண்டங்களாலும், தீவுக் கூட்டங்களாலும், ஏனைய பகுதி இயற்கை நீதிகளினாலும் வரையறுக்கப்பட்டுள்ளன.
இன்று உலகில் பசிபிக் சமுத்திரம், அத்லாந்திக் சமுத்திரம், இந்து சமுத்திரம், அந்தாட்டிக் சமுத்திரம், ஆர்க்டிக் சமுத்திரம் என ஐந்து சமுத்திரங்கள் காணப்படுகின்றன. பசிபிக், அத்திலாந்திக் சமுத்திரங்களை புவிமையக் கோட்டை வைத்து வடக்குத் தெற்குப் பகுதிகளாகப் பிரிப்பதும் உண்டு. சமுத்திரங்களின் சிறிய பகுதிகள் கடல்கள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றைவிட நிலத்தால் சூழப்பட்ட சில உப்புநீர் நிலைகளும் உள்ளன.
மக்கள் வாழ்வில் சமுத்திரங்கள் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் சமுத்திரங்கள் சம்பந்தமாக நாம் எவ்வாறான வழிகளில் பணியாற்ற முடியும் என்பது பற்றி உலக சமுத்திர வலை பின்னலோடு சமுத்திர திட்டமும் இணைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.
அளவுக்கதிகமாக மீனினங்களை நாம் உணவாக உட்கொள்வதன் காரணமாகவும், மீன்களினதும் மற்றும் பெரும்பாலான கடல் உயிரினங்களினதும் தொகை சீக்கிரமாகக் குறைந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இன்னும் 12 வருடங்களில் மீனினங்கள் வெகுவாககக்குறைந்து விடலாம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நேரடியாகப் பங்கு கொள்வதற்கு இத்தினமானது எமக்கொரு அரிய சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது. இத்தினத்தில் புதிய மன நிலையுடன் தனிப்பட்ட மற்றும் சன சமூக நடவடிக்கைகளில் இடுபடல், கடற்கரைகளின் சுத்திகரிப்பு, கல்வி சம்பந்தமான நிகழ்ச்சி நிரல்கள், வரைதல் போட்டிகள், திரைப்பட விழாக்கள், கடலுணவுகள் பற்றிய அறிவுறுத்தல் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, எங்களின் வாழ்வு சமுத்திரங்களில் எவ்வாறு தங்கியுள்ளது என்பதை உணர்த்துவதன் மூலம் மக்களின் மனச்சாட்சியினை மேம்படுத்த முடிகின்றது. இச்சமுத்திரங்களினால் மக்களுக்கு ஏற்படும் சேவைகள் விசாலமானவை. அதே நேரம் பாரிய அழிவுகளையும் நொடிப்பொழுதில் இந்த சமுத்திரங்கள் ஏற்படுத்தி விடும.; உதாரணமாக 2004ஆம்ஆண்டு சுனாமிப்பேரலையைக் குறிப்பிடலாம். இந்த நிகழ்வு பற்றிய உணர்வுகளையும் மாற்றியமைக்க எத்தனித்தல் வேண்டும்.
சமுத்திரங்கள் எங்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். கடல் வளங்கள் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. சமுத்திரங்கள், சர்வதேச வர்த்தக பாதைகளாகவும் விளங்குகின்றன. நாம் சுவாசிக்கும் தூய காற்றினையும், உணவையும் வழங்கும் சமுத்திரங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கின்றன. உலக சமுத்திர தினத்தில் Dr. சால்ஸ் குளோவர் என்பவரின் நூலை அடிப்படையாகக் கொண்ட அவரின் முகவுரையை கொண்ட புகழ்வாய்ந்த THE END OF THE LIVE எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்படுகின்றது.
நொட்டர்டேமிலுள்ள இராஸ்மஸ் பல்கலைக்கழகமும், DELFT தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து இத்தினத்தைக் கொண்டாடுவதற்குப் பல திரைப்பட நிகழ்ச்சிகளை நடாத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை உயிரினங்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
0 comments :
Post a Comment