ஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினம் World Turtle Day : மே 23ம் திகதி - புன்னியாமீன்
உலக ளாவிய ரீதியில் சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவதற்கு குறித்த விடயத்தின் முக்கியத்துவமே மூல காரணமாகும். சர்வதேச தினங்களின் கருப்பொருள் மானுடம் சார்ந்ததாக மாத்திரமல்லாமல் சில முக்கியத்துவம் வாய்ந்த ஜீவராசிகள் தொடர்பாகவும் இந்த விசேட தினங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் 2000 ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23ஆம் திகதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆமை இனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மானுடத்துக்கு விளக்க வகை செய்யப்பட்டுள்ளது.
ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உடலமைப்பைக் கொண்டது. இதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் சில இனங்கள் அழியும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை (leatherback sea turtle) என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்வதாகக் கூறப்படுகின்றது.
ஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினமானது கடலாமைகளின் பாதுகாப்பினை வலியுறுத்தவும் அவை எதிர்நோக்கும் பல்வேறு அழிவுப் பயமுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் ஆராய்வதாக உள்ளது.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. டைனோஸர்களுக்கும் முன்பே பூமியில் தோன்றியவை இவை என்று நம்பப்படுகின்றது. எட்டு வகையான கடல் ஆமைகள் உலகத்தில் காணப்படுகின்றன. இவற்றில் ஐந்து வகை ஆமைகள் இந்திய, இலங்கை கடல் பகுதிகளில் வாழ்கின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அவை தன் உடல் வெப்பத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும். உடல் வெப்பத்தை சீரமைக்கவும், சுவாசிப்பதற்கும் கடலின் மேல் மட்டத்துக்கு வந்து செல்லும்.
நிலத்தில் வாழும் ஆமை தன்னுடைய தலை, கால்களை ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். ஆனால், கடல் ஆமைகளால் இப்படிச் செய்ய முடியாது.
கடல் ஆமைகளில் மிகச் சிறியது சிற்றாமை. வளர்ந்த சிற்றாமையின் எடை சுமார் ஐம்பது கிலோ இருக்கும். சுமார் 80 செ.மீ. நீளம் வரை வளரும். பெரிய ஆமைகளின் எடை சராசரியாக 250 - 400 கிலோ கிராம்களாகும். சில இனங்கள் 900 கிலோ வரை வளர்ந்து காணப்படும்.
கடல் ஆமைகள் நிலத்தில் வாழும் பெரிய ஆமைகளில் இருந்து தோன்றியவைதான். இவை டொல்பின்கள் போல சில நிமிடங்களுக்கொருமுறை மூச்சு விட மேலே வரும்.
பெருந்தலை ஆமைகளின் முக்கியமான உணவு நத்தைகள், ஜெலி மீன், சிப்பி போன்றவை. இவை நத்தை போன்ற உறுதியான ஓடுகளையுடைய உயிரினங்களை உட்கொள்ளத் தகுந்தாற் போன்ற வாயமைப்புடன் இருக்கும். கடல் ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. தாடைகளை வைத்தே மென்று தின்ன முடியும். மிகக் குறைந்த தூரத்துக்கு மட்டுமே பார்க்க முடியும். நுகரும் திறன் இவற்றுக்கு மிகவும் அதிகம்.
கடலிலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெண் ஆமைகள் முட்டையிட நிலத்துக்கு வரும். இதற்காக சில வேளைகளில் ஆயிரக்கணக்கான மைல்கள்கூட நீந்தி வரும். கடலின் விளிம்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அது மணலில் பெரிய பள்ளம் தோண்டும். பின்னர் அதில் முட்டையிடும். ஆண் ஆமைகள் ஒரு முறை கடலுக்கு சென்றுவிட்டால் வாழ்க்கை முழுவதும் அங்கேதான். ஒரு ஆமை 50 இலிருந்து 200 முட்டைகள் வரை இட்டாலும் சில மட்டுமே பொரியும். முட்டைகள் கோல்ப் பந்தின் வடிவத்தில் இருக்கும். முட்டையிட்ட பின்னர் குழியை மூடிவிட்டு, கடலுக்குள் இறங்கிச் சென்றுவிடும். கடலாமைகள் அருகிவரும் ஓர் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளதனால் கடலாமை முட்டைகளை எடுப்பதோ, விற்பனை செய்வதோ குற்றமாகக் கருதப்படுகிறது. முட்டைகளின் மீது படிந்திருக்கும் மணற்படுகை சூரிய வெப்பத்தினால் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடையும். குறித்த காலத்தில் ஆமைக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியேறி மணலைத் துளைத்துக்கொண்டு அவை வெளிவரும்.
முட்டை பொரிந்த பின் (60-85 நாட்கள்) ஆமைக்குட்டிகள் இரவில் கடலுக்குள் சென்றுவிடும். எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பித்து முழு வாழ்நாளையும் கடல் ஆமையால் வாழ முடிந்தால் 120 ஆண்டுகளுக்கு மேலும் வாழும். டிஸ்கவரி சானலில் ஒரு முறை முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குட்டிகள் கடலை நோக்கி விரைவதையும் அவைகளை பிடித்து தின்ன கடல் பறவைகள் வானத்திலிருந்து வட்டமிட்டுக் கீழிறங்குவதையும் ஒளிபரப்பினார்கள். கடற்கரை முழுவதும் குட்டியாக ஆமைகள். ஐந்து ஆறு நிமிடத்துக்குள் அவை கடல் நீரில் புகுந்துவிட்டால் உயிர் தப்பும். கடலுக்குள் செல்லும்வரை ஆமைக் குஞ்சுகளின் நிலை கேள்விக் குறியே.
அலுங்கு ஆமை சில காலங்களில் நச்சுத்தன்மை உள்ள கடல் பஞ்சு போன்ற மிருதுவான தாவர வகையை உண்ணும். இதனால் உடலெங்கும் நஞ்சு பரவியிருக்கும். இவற்றை மனிதர்கள் உண்டால் உயிருக்கே ஆபத்து.
மனிதனால் கடலாமைகள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கும் பிடிக்கப்படுகின்றன. இவற்றைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்காக அதிக கவனமும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது. இத்தினத்தின் பிரதான குறிக்கோள் கடலாமைகளுக்கு அன்பு செலுத்துவதாகும். அவற்றின் நல்வாழ்விற்கு எவ்வாறு வகை செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.
1975முதல் செல்லப்பிராணியாக இவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கடலாமைகள் செல்மொனல்லா எனும் பெக்டீரியாவைக்கொண்டது. இதனால் மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதாலே இது தடை செய்யப்பட்டது. நோய்களைக் கட்டுபடுத்த மற்றும் தடுக்கும் மத்திய நிலையத்தின் கணிப்பீட்டின்படி வருடா வருடம் 74000பேர் சல்மொனல்லா பக்டீரியாவால் பீடிக்கப்பட்டுவருவதுடன், இதில் 6வீதம் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது. இந்நோயால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களும், வயோதிபர்களும் ஆவர்.
கடலாமைகளின் வசிப்பிடங்களைப் பாதுகாத்தல் அவை பாதைகளை குறிக்கிடும் போது அவற்றின் மேலோட்டைப் பிடித்து பாத்திரமாக அகற்றுதல் அவற்றைப் பார்த்து ரசித்தல் அவற்றின் செயல்களை அவதானித்தல் அவற்றைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு கடலாமைகளை வாங்காதிருத்தல் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் கடலாமைகளை கொண்டு போய் காட்டுக்குள் போடாமலிருத்தல் போன்றவற்றை நாம் செய்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment