Sunday, May 23, 2010

நான் ஒரு மார்க்சிஸ்ட்: தலாய் லாமா

திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என்று பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார். நியூயார்க் நகரில் நிகழ்த்திய சொற்பொழிவில் அவர் இதைத் தெரிவித்தார்.
முதலாளித்துவ கொள்கைகள் கம்யூனிஸ நாட்டில் அதீத சுதந்திரத்தைக் கொண்டு வந்தது. அதுவே தன்னை சீனாவிலிருந்து வெளியேற்றக் காரணமாக அமைந்தது என்றார்.

அவர் மேலும் கூறியது:

மார்க்சிய சிந்தனைகள் சில ஒழுக்க நெறிகளைக் கொண்டது.ஆனால் முதலாளித்துவ கொள்கையானது எப்படி லாபம் ஈட்டுவது என்பதை மட்டுமே போதிக்கிறது. கம்யூனிஸத்திலிருந்து விலகி சந்தைப் பொருளாதாரத்துக்கு சீனா மாறியதும் கம்யூனிஸ கொள்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட ஆரம்பித்தது. பின்னர் அதையே அனைவரையும் பின்பற்றுமாறு வலியுறுத்தத் தொடங்கியது.

சீனாவில் முதலாளித்துவ கொள்கை வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

போருக்கு எதிரான இயக்கம் தற்போது சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது. ஹைதியில் நடைபெற்ற பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகெங்கிலிருமிருந்து கிடைத்த உதவி, அமெரிக்காவில் முதல் முறையாக கருப்பர் இனத்தவர் அதிபராக தேர்வு பெற்றுள்ளது ஆகிய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மக்களிடையே மிகுந்த முதிர்ச்சி ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. தற்போது இந்த உலகமே நேசம் மிகுந்ததாகவும் ஒருங்கிணைந்த பகுதியாகவும் மாறிவருவதாகத் தோன்றுகிறது. இந்த கருத்துகள் தவறு என்று எவருக்கேனும் தோன்றினால் தெரிவிக்கலாம் என்று வேடிக்கையாகக் கேட்டார் தலாய் லாமா.

சீனாவின் கம்யூனிஸ ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பேசியதால்தான் 1959-ம் ஆண்டிலேயே அந்நாட்டிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. இன்னமும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது தனக்கு அச்சம் இருப்பதாக அவர் கூறினார்.

சீனா பணக்கார நாடாக முன்னேறும் அதே வேளையில் அனைத்து துறைகளுக்கும் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். முதலில் சுயாட்சி கொண்ட நீதித்துறையும், சுதந்திரமான பத்திரிகை செயல்பாடும் அனுமதிக்கப்பட வேண்டும்.

சீனா தற்போது மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கிறது. மத நல்லிணக்கம் என்பது இதயத்திலிருந்து சுயமாக வெளிவர வேண்டும். அது அச்சத்தினால் வந்தால் பலனிருக்காது. இப்போது மத நல்லிணக்கம் என்பது கட்டாயத்தால் கொண்டு வரப்படுகிறது என்றார்.

சொற்பொழிவுக்கான கட்டணம் அதிகமாக இருப்பது குறித்து கேட்டதற்கு, இதன் மூலம் திரட்டப்படும் தொகையில் ஒரு டாலர் கூட தம்மை வந்தடையாது என்ற அவர், பொதுவாக இதுபோன்ற சொற்பொழிவுக்கான கட்டணத்தை குறைவாக நிர்ணயிக்குமாறு ஏற்பாட்டாளர்களிடம் கூறுவதாக அவர் சொன்னார். இதன் மூலம் திரட்டப்படும் தொகையில் ஒரு பகுதி அறக்கட்டளைகளுக்கு செல்வதாக தலாய் லாமா குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com