Saturday, May 22, 2010

சர்வதேச ‘உயிர்ப் பல்வகைமை தினம்’ - புன்னியாமீன்

இன்று மே 22 சர்வதேச உயிர்ப் பல்வகைமை The International Day for Biological Diversity (or World Biodiversity Day) தினமாகும். உயிரியல் சம்பந்தமான பல்வகைமை பற்றிய சர்வதேச தினம் மே 22ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. உயிரியல் என்பது ‘உயிர் வாழ்வன’ பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், உயிரினங்களின் தோற்றம், அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தினத்தின் முக்கிய நோக்கம் உயிர்ப் பல்வகைமை பற்றிய விடயங்களை ஆராய்வதும் அவை எதிர்நோக்கக்கூடிய சவால்களையும் கவனத்திற் கொண்டு அவை பற்றிய ஆய்வுகளையும், விளக்கங்களையும் முன்வைப்பதாகும்.

‘உயிரியல்’ விரிவுபட்ட அதேநேரம், தனித்தனித் துறைகளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்விச் செயற்பாடுகளை உள்ளடக்கிய ஒரு துறையாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாக பரந்த அடிப்படையில் உயிர்வாழ்வன பற்றி ஆய்வு செய்கின்றன.

இத்தகைய ஆய்வுகள் அணு மற்றும் மூலக்கூறுகள் மட்டத்தில், மூலகூற்று உயிரியல், உயிர்வேதியியல் ஊடாகவும், களங்கள் (cell) மட்டத்தில் களங்கள் உயிரியல் ஊடாகவும், கள மட்டத்தில் உடற்கூற்றியல், மற்றும் கள அமைப்பியல் ஊடாகவும், தனிப்பட்ட உயிரினத்தின் விருத்தி அல்லது ontogeny மட்டத்தில் விருத்தி உயிரியல் ஊடாகவும், பெற்றோர், offspring இடையிலான பரம்பரைத் தொடர்புகள் மட்டத்தில் பரம்பரையியல் ஊடாகவும், குழு நடத்தைகள் மட்டத்தில் நடத்தையியல் ethology ஊடாகவும், முழு population மட்டத்தில் தொகை மரபியல் population genetics ஊடாகவும், பல்வகை உயிரினங்களில் lineages மட்டத்தில் முறைப்பாடியல் ஊடாகவும், ஒன்றிலொன்று சார்ந்துள்ள populations மற்றும் அவைகளின் வாழிடங்கள் மட்டத்தில், இயற்கை இயல் மற்றும் பரிணாம உயிரியல் ஊடாகவும், பூமிக்கு அப்பாலுள்ள உயிர்கள் மட்டத்தில், xenobiology ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இது ஒரு விரிவான துறையாகும்.

இத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து 1993ஆம் ஆண்டில் ஐ. நாடுகள் பொதுச் சபையின் இரண்டாம் குழுவினால் இத்தினம் பிரகடனப்படுத்தட்டதிலிருந்து 2000ஆம் ஆண்டுவரை டிசம்பர் 29ஆம் திகதிகளிலேயே அனுஸ்டிக்கப்பட்டு வந்தது. 2000ஆம் ஆண்டு நடை பெற்ற ‘ரயோ ஏர்த”; மகாநாட்டின்போது “டிசம்பர் மாதத்தில் விடுமுறைகள் அதிகமாக இருப்பதால்” சர்வதேச உயிர்ப் பல்வகைமை The International Day for Biological Diversity (or World Biodiversity Day) தினத்தை மே 22ல் அனுஸ்டிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட “மிலேனியம் எக்கோ சிஸ்டம்” (M.A) மதிப்பீட்டின்படி இந்நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உயிர்ப் பல்வகைமை Biological Diversity (or World Biodiversity) இழப்புக்கு காலநிலை மாற்றமானது நேரடிப் பாதிப்பினை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

2100 ஆண்டளவில் வெப்பநிலையனாது 1.4 பாகை செல்சியஸிலிருந்து 5.8 பாகை செல்சியஸாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கால நிலை மாற்றமானது விநியோக மாற்றங்கள், அழிவு அதிகரிப்பு விகிதங்கள், இனப் பெருக்கத்தில் பாதிப்பு போன்றவற்றுடன் தாவரங்களின் வளர்ச்சியில் மாற்றங்களையும் ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

இம்மாற்றங்களின் காரணமாக ஒரு மில்லியனுக்கு கூடிய இனங்கள் அழிவுறும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தாவர இனங்களின் அழிவையும், காலநிலை மாற்றத்தையும் முறைப்படி எதிர்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்குச் செயற்படின் அடுத்து வரும் காலங்களில் இந்நிலையை வெற்றிகரமாக எதிர்நோக்க முடியும்.

இவ்விடத்தில் பூகோலத்தின் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக சிறிது ஆராய்தல் அவசியம்.

பூகோலத்தின் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)] எனும் அறிஞர் “கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது. புவியின் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரித்து 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல “கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும். கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டிப்படைந்துள்ளது. அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார். எதிர்பார்த்ததை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.” - கிரிஸ்டொபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]

மேலும், “55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவி அதிகமாக வெப்பமடைந்ததால் மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினங்கள் கூட அழிந்தன என்றும், அதே நேரத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது. அந்த மாதிரி வெப்ப யுகம் சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது. அது 10,000 - 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை ஏற்படுகின்றது.” மேற்படி கருத்துக்களைப் பார்க்குமிடத்து புவி வெப்பமடைவதும், இதனால் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் எம்மால் தீர்மானிக்கக்கூடியதே.

“உலகத்தின் சனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது’. அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் புவிச் சூடேற்றத்தை மிகையாக்க இடமுண்டு.

சில தசாப்தங்களுக்குள் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவுமில்லாமல் போகலாம் எனவும் அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேநேரம், சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன, அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின, அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிமலைகள் உருகிக் கரைந்து விட்டன, நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மக்களை புலப்பெயர்ச்சி செய்து விட்டது, வன்முறைகளுக்கும் யுத்தங்களுக்கும் மட்டும் தான் மனிதன் பயப்பட வேண்டும் என்று பொருளில்லை கால நிலையும் அதைவிடப் பயங்கரமானதே.

இவ்விடத்தில் புவிச் சூடேற்றம் என்றால் என்ன என்பதையும் சிறிது விளங்கிக் கொள்ள வேண்டும்.

புவி என்று நாம் கூறும்போது மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட வெப்ப அதிகரிப்பை [Temperature Range] ஏற்படுத்திக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி வெப்ப அதிகரிப்பு இடம் பெற்று விடும். வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் அனைத்துமே பாதிக்கப்படும்

பச்சை வீட்டு வாயுக்கள் (கார்பனீர்ஒக்சைட், மீதேன் போன்ற வாயுக்கள்) பூமியில் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன. ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே. ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, எண்ணை போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் பச்சை வீட்டு வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூமியின் வெப்பம் வேகமாக உயர்கின்றது.

அண்மையில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டு காலமாக பனிப்படலங்களிலிருந்தும் சேமிப்பாய் உள்ள மீதேன் புவியின் வெப்ப நிலை அதிகரிப்பினால் அதிகமாக வெளியேரலாம் என எச்சரித்துள்ளது. மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்பட்டுள்ளது. புவிச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பனீர் ஒக்சைட்டை விட 23 மடங்கு அதிகம் எனப்படுகின்றது. உலகில் அதிகமான விஞ்ஞானிகள் புவிச் சூடேற்றத்தை உண்மையென ஏற்றுக் கொண்டாலும் அம்மாறுதலை ஏற்றுக் கொள்ளாத அறிஞர்களும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் புவிச் சூடேற்றத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் உண்மையாகவே உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதினால் காலநிலைக் கோர விளைவுகளை கண்ணூடாகக் காண்கின்றோம். துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் அதிகரிப்பதைக் காண்கிறோம். கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகள், நில அதிர்வுகள்,எரிமலை வெடிப்புகள், போன்றவற்றைக்காண்கின்றோம். நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் ஐயம் இன்று ஏற்பட்டு விட்டது. உதாரணத்திற்காக அண்மைக்காலங்களாக காலநிலைமாற்றத்தால் ஏற்பட்ட சில கோர விளைவுகளை நோக்குவோம். கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5] எண்ணிக்கை இரட்டித்துள்ளது, கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன, குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன, 7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

மேலும் தொடர்ந்தும் புவியின் வெப்பநிலை அதிகரிப்பதினால் கீழ்க்காணும் அபத்தங்களும் ஏற்பட வாய்ப்புண்டு, அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும், கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம், 2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம், 2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம், வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம், நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பால் எழுகின்ற இந்த பிரச்சனைகளை நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும். அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமையாகவும் உள்ளது. நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும். அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் இப்போது வந்துவிட்டது. புவிச் சூடேற்றத்தை நாங்கள் கட்டுப்படுத்தாவிடின் இன்னும் சில தசாப்தங்களில் பாரிய உயிரின இழப்புகள் ஏற்பட இடமுண்டு. இதனை இத்தினத்தில் நினைவிற் கொள்வோம்.

1 comments :

Anonymous ,  October 20, 2010 at 1:01 PM  

Thanks for the info

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com