உலகின் சகல ஊடகவியலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை
உலகின் சகல நாட்டு அரசாங்கங்களும் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலக ஊடக சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்களை பாதுகாப்பது மட்டுமன்றி அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைளை கட்டவிழ்த்து விடும் நபர்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் மக்களின் மிக அடிப்படையான சுதந்திரங்களில் ஒன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் 19ம் சரத்தில் ஊடக சுதந்திரம் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ள போதிலும், உலகின் சில நாடுகளில் இதற்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அச்சு ஊடக நிறுவனங்கள் மீது கூடுதல் வரிச் சுமையை திணித்தல், வானொலி தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒலி, ஒளிபரப்புக்களுக்கு தடை ஏற்படுத்தல் குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு தடை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய தளங்களிலும் தற்போது செய்தி வெளியீட்டுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
கடந்த வருடத்தில் 77 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துச் சுதந்திரம் குறித்த புதிய சட்டங்கள் வரவேற்கப்படுவதாகவும், அவை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகத்தின் சேவையை சிவில் சமூகம், அரசாங்கம் மற்றும் ஏனைய தரப்பினர் புரிந்து கொண்டு அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment