இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல்-யாருக்கும் மெஜாரிட்டி இல்லை:
கூட்டணி அரசு அமைக்க போட்டி!இங்கிலாந்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களில் வென்று முன்னிலையில் உள்ளது. ஆனால், யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை உருவாகும் என்பதால் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சி பெரும் தோல்வியை சந்திக்குள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்தது. மொத்தமுள்ள 650 தொகுதிகளில் ஒன்றை தவிர 649 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடந்தது. இதில் 4,150 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆளும் தொழிலாளர் கட்சி, எதிர்க் கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சி ஆகியவை இடையே தான் கடும் போட்டி நிலவியது.
வாக்குப் பதிவு முடிந்து நேற்றிரவே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதுவரை 325 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 286 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. இந்தக் கட்சிக்கு 305 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், ஆட்சியமைக்க 326 எம்பிக்கள் தேவை என்பதால் இந்தக் கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்று தெரிகிறது.
பிரதமர் கார்டன் பிரவுன் தலைமையிலான தற்போதைய ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி 237 இடங்களை பிடித்து 2வது இடத்தில் உள்ளது. இந்தக் கட்சிக்கு 255 இடங்களே கிடைக்கும் என்று தெரிகிறது.
51 இடங்களில் வென்று லிபரல் ஜனநாயக கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தக் கட்சிக்கு 61 இடங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. இதனால் கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் ஜனநாயக கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்கலாம் என்று தெரிகிறது.
பெரும்பாலான இடங்களில் தொழிலாளர் கட்சியை கன்சர்வேடிவ் கட்சி தோற்கடித்துள்ளது. ஆனால், லிபரல் ஜனநாயகக் கட்சியின் கோட்டையை கன்சர்வேடிவ் கட்சியால் தகர்க்க முடியவில்லை. இதனால் அந்தக் கட்சி வழக்கமாக வெல்லும் இடங்களை மீண்டும் பிடித்து அடுத்து யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கிறது.
இங்கிலாந்து அரசியல் சட்டப்படி, யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் ஆட்சியில் இருக்கும் பிரதமரே அடுத்த ஆட்சியையும் அமைக்க முயற்சிக்கலாம். இதனால் தொழிலாளர் கட்சி சார்பில் மீண்டும் ஆட்சியமைக்க பிரதமர் கார்டன் பிரவுன் முயல்வார் என்று தெரிகிறது. இது தொடர்பாக லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் நிக் கிளக்குடன் அவர் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார்.
ஆனால், இந்த இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்தால் கூட ஆட்சியமைக்கத் தேவையான 326 எம்பிக்கள் இல்லை என்பதால் வேறு சில கட்சிகளுடனும் பிரதமர் கார்டன் பிரவுன் பேச்சு நடத்தி வருகிறார். ஆனால், இது ஜனநாயகப் படுகொலையாக அமையும் என்றும், மக்களின் தீர்ப்பு ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்துள்ளதால் மீண்டும் ஆட்சியமைக்க அந்தக் கட்சி முயலக் கூடாது என்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் காமரூன் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான பிரீத்தி படேல் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்பியாவது இதுவே முதல் முறையாகும்.
அதே போல மற்றொரு இந்திய வம்சாவளி பெண்ணான வலேரிவாஷ் வால்சால் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். இவர் இதே கட்சியின் எம்பியான கெய்த் வாஷின் சகோதரியாவார்.
இந்தத் தேர்தலில் ஆசிய நாடுகளை சேர்ந்த 89 பேர் போட்டியிட்டனர். இவர்களில் 16 பேர் இதுவரை வெற்றி பெற்றுள்ளனர்.
0 comments :
Post a Comment