Friday, May 21, 2010

புலனாய்வுப் பிரிவு சக்திமயப்படுத்தப்படும். புலிகள் தலைதூக்க முடியாது. கோத்தபாய

மீண்டும் அவர்கள் இந்நாட்டில் தலையெடுக்க நாம் விடப்போவதில்லை. புலிகளை ஒழித்து ஓராண்டு கழிந்துவிட்ட நிலையில், அவர்கள் மீள ஒன்று சேர்ந்து வெளிநாடுகளில் போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதைத் தடுக்கும் பொருட்டு, எமது புலனாய்வுத்துறையை சக்திமயப் படுத்தவேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் யுத்த வெற்றியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், புலிகள் தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக சக்திமயப்பட்டு, இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியை தமதுக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இந்தநிலையில் அவர்கள் இராணுவ ரீதியாக தோற்கடிப்பப்பட்டுள்ளார்கள்.

மீண்டும் அவர்கள் இந்நாட்டில் தலையெடுக்க நாம் விடப்போவதில்லை. அவர்கள் உள்நாட்டில் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதும், சர்வதேச ரீதியாக அவர்கள் செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவதற்கு, இலங்கையின் புலனாய்வுத்துறையை சக்திமயப்படுத்த வேண்டும்.

அத்துடன் பாதுகாப்பு படையினர், பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறையினரின் மிகச்சிறந்த சேவையினாலேயே, அவர்களைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கிடையில் புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு நாடுகளிலும் தற்போது செயற்பட்டு, புலிகளின் செயல்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

புலிகள் 1983 ஆம் ஆண்டு தமது போராட்டத்தைத் தொடர்ந்த காலப்பகுதியிலிருந்து இன்று வரை நாட்டில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டே வருகிறது. இறுதிக்கட்ட போர் குறித்து சர்வதேச அழுத்தங்கள் அரசாங்கத்தைப் பல வழிகளிலும் வந்தடைகின்றன. எனினும், இறுதிக்கட்டப் போரில் எமது படையினர் பொது மக்கள் எவரையும் கொல்லவில்லை என்பதே உண்மை" என்றார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com