கருணாநிதிக்கு பிரபாகரனின் தாய் பார்வதி கடிதம்.
தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை சென்ற பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெறுவதற்கு பார்வதி அம்மாள் கோரிக்கை விடுத்தால் தமிழக அரசு அதனை பரிசீலிக்கும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் உறுதியளித்தார்.
இதனையடுத்து, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பார்வதி அம்மாள் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு :
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்கட்கு!
எனது மரியாதைக்கும் மதிப்புக்குமுரிய தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் துணைவியார் பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல்.
நான் நீண்டகாலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது காலும் கையும் செயலற்ற நிலையில் இருந்து வருகிறேன். நான் தமிழ்நாட்டில் இருந்த காலத்தில் முசிறியிலுள்ள டாக்டர் ராஜேந்திரனிடம் வைத்தியம் பெற்று வந்தேன். ஆனால் 2003ம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு சென்றபடியால் தொடர்ந்து வைத்தியம் செய்ய முடியாமல் போய்விட்டது. வன்னியிலும் இராணுவ முகாமிலும் சரியான மருத்துவ வசதிகள் இல்லாதபடியால் எனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுவிட்டது.
கொழும்பில் எளிதில் விசா எடுக்க முடியாத சூழ்நிலையில் எனது மகள் விநோதினி இராஜேந்திரம் என்னை மலேசியாவிற்கு வரவழைத்து அங்கு இந்தியா விசா பெற்று என்னை சென்னைக்கு ஒரு பெண்ணின் உதவியுடன் அனுப்பி வைத்தார்.
கனடிய குடிமகளான எனது மகளுக்கு மலேசியாவில் இருந்து கொண்டு இந்திய விசாவிற்கு விண்ணப்பித்த போதும் அதனை உரிய நேரத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டது.
ஆனால் எங்கோ ஒரு தவறு ஏற்பட்டு இருக்க வேண்டும் இல்லாது விடின் உரிய கடவுச்சீட்டு, ஆறு மாத விசா அனைத்தும் இருந்தும் சென்னையில் நான் விமானத்தை விட்டு இறங்க முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டு என்னையும் என்னுடன் துணைக்கு வந்த பெண்மணியையும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
எனது வைத்தியத்திற்கு டாக்டர் இராஜேந்திரன் வேறு தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் ஏற்பாடு செய்வார் என்பதால் தயவு செய்து நான் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வருவதற்கு மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக ஏற்பாடு செய்து தருமாறு அன்போடு வேண்டுகின்றேன்.
நான் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக தமிழக சட்டசபையில் நடந்த விவாதத்தில் பதில் அளித்த நீங்கள் நான் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால் அதைப்பற்றி பரிசீலித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தயார் என தெரிவித்திருந்தீர்கள். உங்களது உறுதிமொழி எனக்கு ஆறுதலைத் தந்துள்ளது.
தங்கள் உதவியினை என்றும் மறக்கமாட்டேன். நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்.
நன்றியுடன் தங்கள் உடன்பிறப்பு,
திருவேங்கடம் வேலுப்பிள்ளை பார்வதி
இவ்வாறு பார்வதி அம்மாள் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment