Sunday, May 2, 2010

தற்பொழுது நாட்டின் எதிரி பிரபாகரன் அல்ல அரசாங்கமே. லால் காந்த

தொழிலாளர் தினமான நேற்று கம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற மேதின மக்கள் விடுதலை முன்னணியின் ஒன்று கூடலில் கலந்து கெண்டு பேசிய லால் காந்தா, நாம் இந்த மே தின அணிவகுப்பை நடத்துகின்ற இந்த வேளையில் போர் முடிவுக்கு வந்து விட்டது. அரசாங்கம் ஒன்றும் நம் கண் முன் உள்ளது. தற்போது நாட்டில் உள்ள தொழிலாளர்கள் நேரடியாக ராஜபக்சவினது அரசை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப்பொழுது மக்களின் எதிரி பிரபாகரன் அல்ல. இலங்கை அரசாங்கம் தான். உழைக்கும் தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கும்படி அரசை வலியுறுத்தும் போராட்டம் இந்த மே தினத்திலிருந்து துவக்கப்படும் என சோசலிஸ தொழிலாளர் சங்சத்தின் அமைப்பாளர் M.D. லால் காந்த தொழிலாளர்களின் மே தின அணிவகுப்பின் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்

போன வருடமோ அல்லது அதற்கு முந்தைய 30 வருடங்களிலோ நாம் நடத்திய தொழிலாளர் தின கூட்டங்கள் வேறு வகையானது. அந்த சமயங்களில் எல்லாம் நாட்டில் போர் நடந்து வந்தது. ஆனால் தற்போது சூழல் மாறியுள்ளது. ஆப்போது உழைக்கும் வர்க்கத்தினர் நாட்டின் அரசாங்கத்திற்கும் எதிராக போராடும் அதே நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது யுத்தத்தையும் முன்னெடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அப்போது கூட உழைக்கும் வர்க்கத்தினர் அரசை நேருக்கு நேராக கேள்விகள் கேட்கலாம். ஆனால் தொழிலாளர்கள் அந்த பிரச்சினைகளை மறந்து விட்டு மாறியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நம் உரிமைக்காக போராட முன் வர வேண்டும்.

நமக்கு தரப்படுவதாக அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்ட சம்பள உயர்வு 2500 ரூபாக்கள் இன்னும் தரப்படவில்லை. போருக்குப் பின்னர் நிவாரண உதவிகளையும் புதிய வேலைகளையும் தொழிலாளர்கலாகிய நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால் அரசால் மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இன்று இருக்கும் இந்த அரசாங்கம் பட்ஜெட்டை கூட தாக்கல் செய்ய முடியாத நிலையிலேயே உள்ளது. போன வருடம் மே மாதம் 18 ஆம் தேதியே போர் முடிவுக்கு வந்து விட்டது. ஓராண்டு முடியும் தருவாயில் கூட உழைக்கும் வர்க்கத்தினருக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மகிந்த ராஜபக்ச போரை துவக்கிய நாளில் இருந்து தொழிலாளர்கள் எதிலும் வெற்றி காண முடியவில்லை. ஆனால் இதற்காக போராடிய தொழிலாளர்களுக்கு தீவிரவாதிகள் அல்லது ஈழ போராளிகள் என்ற முத்திரை மட்டும் குத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மனித உரிமைகள் மீறப்பட்டது. அனைத்து பொருட்களுக்குமே அதிக வரி விதிக்கப்பட்டது. தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைக்கு போதுமான அளவிற்கு ஊதியம் தரப்படவில்லை. இந்த உரிமைகளுக்காக போராடி அவற்றை பெற வேண்டிய சந்தர்ப்பம் இப்போது வந்துள்ளது.

நம்முடைய தொழிலாளர் கூட்டமைப்பின் செயல்பாடுகளை யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் வவுனியாவிற்கும் விரிவு படுத்த வேண்டும். போரினால் பிளவுபட்டுள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்க வேண்டும். இதற்கான வேலைகள் மட்டக்களப்பு மற்றும் வவுனியாவில் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன என்று பேசினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரா திசாநாயக கடந்த வருடம் நவம்பர் மாதத்திலேயே தாக்கல் செய்திருக்கவேண்டிய பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்யாமல் அதற்கு மாறாக வாக்குகளுக்கு பணத்தை செலவளித்ததாக கூறினார். புதிதாக அமைய போகும் அரசாங்கம் அதை செய்யட்டும் என மகிந்த ராஜபக்ச எண்ணியதாகவும் ஆனால் தற்போது போது தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமலேயே உள்ளது என்றும் பேசினார். இப்போது வாக்குகளுக்கு பணமளிக்கும் முறையையும் தாண்டி ராஜபக்ச அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பணத்தை செலவழித்து வருகிறார். இது போன்று தேர்தல்களுக்காக வரைமுறை ஏதுமின்றி அரசு செலவளித்ததால் தற்போது அவசர தேவைக்கான நிதியிருப்பு கூட அரசிடம் இல்லாமல் போய் விட்டது. அதனால் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் காலம் கடத்தி வருகின்றனர். இல்லையெனில் 2/3 மடங்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? உண்மையான புள்ளி விபரங்களை மறைக்க வேண்டிய அவசியமென்ன? ராஜபக்சவால் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியாது.

போர் முடிந்து ஒராண்டு ஆன பின்னரும் தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேடி ஒவ்வொரு முகாம்களுக்கும் அலையும் அவல நிலை தொடர்கிறது. தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருகின்றனரா இல்லையா என்பது கூட தெரியாமல் அலைகின்றனர். இன்னும் கூட உயிருடன் இருப்பவர்கள் யார் என சொல்லும் நிலையில் அரசு இல்லை. 15,000 தமிழ் இளைஞர்கள் ஆண் பெண் இருபாலரும் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சட்டப்படியாகவும் ஏதும் செயல்பட முடியவில்லை. ராஜபக்ச அரசில் நாட்டில் ஜனநாயகமே இல்லை. நாட்டின் எந்த முன்னேற்றத்திற்கும் வழியில்லை. ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே பயனடையும் விதத்தில் பொருளாதார கொள்கைகளை பின்பற்றுகின்றனர் என்று பேசினார். [கவிநிலா]



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com