Tuesday, May 4, 2010

நிரந்தர தீர்வு காண இலங்கையை வலியுறுத்துவதாக பிரிட்டன் அமைச்சர் தகவல்

இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும்படி இலங்கை அரசு தாங்கள் வலியுறுத்தி வருவதாக பிரிட்டன் அயலுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், லண்டனிலுள்ள இலங்கை தமிழர்களின் வாக்குகளை கவர ஆளும் தொழிலாளர் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இலங்கை தமிழ் சமூகத்தினருக்காக, பிரிட்டன் அயலுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தற்போது நிலவும் மனிதநேய நெருக்கடிகளினைக் களைவதற்கு தன்னாலான சகல முயற்சிகளையும் முன்னெடுக்க தொழிற்கட்சி அரசாங்கம் உறுதி கொண்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் 41 மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கு மேலான தொகையினை வறுமை ஒழிப்பிற்கும், முரண்பாட்டு தவிர்ப்பிற்குமான செயற்திட்டங்களுக்கு நாம் வழங்கியுள்ளோம்.

பிரிட்டனில் வாழும் இலங்கைச் சமூகங்கள் மீது தொழிற்கட்சி காட்டும் தோழமை ஆதரவு என்பது என்னைப் பொறுத்த வரை, எமது நாட்டிற்குத் தேவையானதும், எமது கட்சி தனது இதயத்தில் கொண்டிருப்பதுமான சர்வதேசியத்தின் வெளிப்பாடாக நான் உணர்கின்றேன்.

இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கான காரணங்களைக் களையும் வண்ணம் தீர்வுகண்டு, நிலையான சமாதானத்தினைக் கட்டி எழுப்புவதற்குமான வரலாற்று வாய்ப்பினை இலங்கை தற்போது கொண்டுள்ளது.

எமது அழுத்தத்தினை தொடர்ச்சியாக வழங்குவதன் ஊடாக, இந்த அளப்பரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி முரண்பாடுகளுக்கு நிரந்தரமான தீர்வினை காணும்படி, இலங்கை அரசாங்கத்தினையும், அதன் சகல சமூகங்களையும் நாங்கள் தூண்டி வருகின்றோம்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தினை வெற்றி கொள்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டதுபோல், நாட்டில் சமாதானத்தை வென்றெடுப்பதற்கும் அரசு தனது சகல முனைப்புக்களையும் ஒன்றுபடுத்தி செயற்படுவதே இலங்கை அரசின் மிக முக்கியமான பணியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் டேவிட் மிலிபான்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com